முகமட் ஈசா அப்துல் சாமாட்-டின் KPF என்ற பெல்டா குடியேற்றகாரர் கூட்டுறவுக் கழகத்தின் தலைமைத்துவப் பதவியையும் அந்தக் கூட்டுறவில் அவரது உறுப்பியத்தையும் கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.
KPFல் ஈசாவின் உறுப்பியத்தையும் தலைவர் பதவியையும் எதிர்த்து வழக்காடுவதற்கு அனுமதி கோரி நான்கு பெல்டா குடியேற்றக்காரர்கள் சமர்பித்துள்ள விண்ணப்பத்தில் சான்றுகள் இருப்பதாக நீதிபதி அபாங் இஸ்காண்டார் அபாங் ஹஷிம் கூறினார்.
அதற்கு முன்னதாக முதுநிலை கூட்டரசு வழக்குரைஞர் சம்சுல் போல்ஹசான் எழுப்பிய எல்லா தொடக்க நிலை ஆட்சேபங்களையும் அவர் நிராகரித்தார்.
அந்த விவரங்களை குடியேற்றக்காரர்களின் வழக்குரைஞரான முகமட் ஹனீபா மைதின் நிருபர்களிடம் வெளியிட்டார்.
ஈசாவின் KPF உறுப்பியத்தையும் தலைவர் பதிவியையும் இடைக்காலத்துக்கு நிறுத்தி வைப்பதற்கு நீதிபதியின் முடிவு வகை செய்துள்ளது.
“ஆகவே நாளை KPFன் ஆண்டுப் பொதுக் கூட்டம் நடைபெறவிருக்கிறது. அதில் ஈசா கலந்து கொள்ள முடியாது,” என்றார் அவர்.
நீதித்துறை மறு ஆய்வுக்கான விண்ணப்பத்தை பெல்டா ஜெங்கா குடியேற்றக்காரர்களான அப்துல் தாலிப் அலி, அப்துல் முபின் அப்துல் ரஹ்மான, அப்துல் ரசாக் முகமட், முகமட் நோர் அத்தான் ஆகியோர் கடந்த வெள்ளிக் கிழமை சமர்பித்தனர்.
அந்த விண்ணப்பத்தில் மலேசியக் கூட்டுறவுக் கழக ஆணையம், அதன் தகராறுத் தீர்வுக் குழு, KPF ஆகியவை பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.
KPF வாரியத்துக்கு ஈசா நியமிக்கப்பட்டதில் முறைகேடுகள் இருந்தாலும் அது உறுதியானது என மலேசியக் கூட்டுறவுக் கழக ஆணையம் செய்த முடிவை அந்தக் குடியேற்றக்காரர்கள் எதிர்த்து வழக்காடுகின்றனர்.
மே 23ம் தேதி எடுக்கப்பட்ட அந்த முடிவு செல்லாது என அறிவிக்குமாறும் நீதிமன்றத்தை குடியேற்றக்காரர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
தலைவராக ஈசா நியமிக்கப்பட்டதை KPF ரத்துச் செய்ய வேண்டும் என்பதற்கான உத்தரவும் பிறப்பிக்கப்பட வேண்டும் எனவும் அவர்கள் கோருகின்றனர்.
KPF வாரியத்துக்கு ஒருவர் நியமிக்கப்பட வேண்டுமானால் அவர் குடியேற்றக்காரராக இருக்க வேண்டும் அல்லது குடியேற்றக்காரரின் குடும்ப உறுப்பினராக இருக்க வேண்டும் அல்லது கூட்டுறவுக் கழகம் ஒன்றில் இரண்டு ஆண்டுகளுக்கு உறுப்பினராக இருந்திருக்க வேண்டும் என அதன் துணைச் சட்டங்கள் கூறுகின்றன.
ஈசா தலைவராக நியமிக்கப்படுவதற்கு அனுமதிக்கும் வகையில் துணச் சட்டங்களைப் பின்பற்றுவதிலிருந்து KPFக்கு விலக்கு அளிப்பதற்கு அமைச்சர் என்ற முறையில் தமது அதிகாரங்களைப் பயன்படுத்தியதாக உள்நாட்டு வாணிக, கூட்டுறவு, பயனீட்டாளர் விவகார அமைச்சர் இஸ்மாயில் சாப்ரி யாக்கோப் தெரிவித்துள்ளார்.