ராபிஸி, சிலாங்கூர் அரசாங்கப் பதவியிலிருந்து விலகிக் கொண்டார்

பிகேஆர் வியூக இயக்குநர் ராபிஸி இஸ்மாயில் தமது சிலாங்கூர் அரசாங்கப் பதவியிலிருந்து விலகிக் கொண்டுள்ளார்.

தமக்கு ஒய்வு தேவைப்படுவதால் சிலாங்கூர் பொருளாதார ஆலோசகர் அலுவலத்தில் தலைமை நிர்வாக அதிகாரி என்ற அந்தப் பதவியை ராஜினாமா செய்வதாக அவர் சொன்னார்.

தமது பதவித் துறப்புக்கு “அரசியல் பார்வை” ஏதுமில்லை என ராபிஸி தமது டிவிட்டர் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

“இனிமேல் எல்லா கேள்விகளும் மாநில அரசாங்கத்துக்கு அல்லது சிலாங்கூர் பொருளாதார ஆலோசகர் அன்வார் இப்ராஹிமுக்கு அனுப்பப்பட வேண்டும்.”

“ராஜினாமாக்கள் வழக்கமானவை. எனக்கு ஒரளவு ஒய்வு தேவைப்படுகின்றது. கட்சிப் பணியையும் சிலாங்கூர் அரசாங்க வேலையையும் செய்வது எனக்கு மிகவும் பளுவாக இருந்தது. ரமதானும் வந்து கொண்டிருக்கிறது. நான் தொழுகையில் கவனம் செலுத்த விரும்புகிறேன்,” என்றார் ராபிஸி.

“அந்தப் பதவியில் நான் இரண்டு ஆண்டுகளுக்கு மட்டுமே இருக்க வேண்டும் என நான் எண்ணியிருந்தேன். இப்போது அதற்கான நேரம் வந்து விட்டது.”

என்றாலும் ராபிஸி விலகியுள்ள நேரம் பல சர்ச்சைகளை கிளப்பியுள்ளது.

ஏற்கனவே பிகேஆர் உறுப்பினர்கள் சிலாங்கூர் மந்திரி புசாரின் அரசியல் செயலாளர் பாக்கா ஹுசின் மீது வெளிப்படையாக சர்ச்சையில் ஈடுபட்டுள்ளனர். அந்தத் தகராற்றுடன் ராபிஸியின் பதவித் துறப்பு சம்பந்தப்பட்டிருக்கலாம் என அவர்கள் கூறுகின்றனர்.

ராபிஸிக்கும் மந்திரி புசாருக்கும் இடையில் பொருளாதார விவகாரங்களில் ஏற்பட்ட மோதல் அந்தப் பதவித் துறப்புக்கு வழி வகுத்திருக்கலாம் என சிலாங்கூர் பிகேஆர் தலைவர் அஸ்மின் அலிக்கு ஆதரவான டிவிட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலவசக் கல்வி தொடர்பான முன்னோடித் திட்டம் மீது காலித்துக்கும் ராபிஸிக்கும் கருத்து வேறுபாடு நிலவியதாக மாநில அரசாங்க வட்டாரங்கள் கூறிக் கொண்டுள்ளன.

அந்தக் கூற்றுக்களை நிராகரித்த ராபிஸி, தமது பதவித் துறப்புக்கும் பாக்கா அல்லது மாநில அரசுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை எனத் தெரிவித்தார்.