சிரியா அதிபர் பஷார் கல்-அஸ்ஸாத்துக்கு எதிராக பொது மக்களில் ஒரு பகுதியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கிய போராட்டம் இன்று வரை ஓயாமல் நீடித்து வருகிறது.
போராட்டக்காரர்கள் அரசுக்கு எதிராக கலவரத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பல இடங்களில் ராணுவத்துக்கும்- போராட்டக்காரர்களுக்கும் பயங்கர மோதல் ஏற்பட்டு உயிர் பலி நிகழ்கிறது. அங்கு நடக்கும் கலவரத்தில் இதுவரை 15 ஆயிரம் பேர் பலியாகி உள்ளனர்.
கலவரம் தீவிரம் அடைந்ததால்,நாட்டின் பல பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப்பட்டது. எனினும் கலவரம் கட்டுக்குள் வரவில்லை. பெய்ரூட் உள்ளிட்ட நகரங்களில் நேற்று வரலாறு காணாத அளவில் கலவரம் மூண்டது. பொது மக்கள்- ராணுவ வீரர்கள் இடையே நடைபெற்ற மோதலில் 170 பேர் கொல்லப்பட்டனர். இதில் பொது மக்கள் 104 பேர் ஆவர். ராணுவ வீரர்கள் 54 பேர் கொல்லப்பட்டனர்.
தேரா மாகாணத்தில் 2 குழந்தைகள் உள்பட 24 பொது மக்களும், கலவரக்காரர்கள் 5 பேரும் பலியாகினர். இதுபற்றி சிரியா மனித உரிமைக்கான பார்வையாளர்கள் கூறுகையில், ஏப்ரல் 12-ந்தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. எனினும் கலவரம் ஓய்ந்தபாடில்லை. இன்றைய (நேற்று) பொழுது மோசமான நாளாக விடிந்தது. பல்வேறு பகுதிகளில் நடந்த மோதலில் ஒரே நாளில் 170 பேர் கொல்லப்பட்டனர் என்றார்.