பதவி விலகும் அரசாங்கத் தலைமைச் செயலாளர் சிடெக் பெட்ரோனாஸ் தலைவராகிறார்

முகமட் சிடெக் ஹசான் பெட்ரோனாஸ் தலைவராக நியமிக்கப்படவிருக்கும் தகவலை பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் நேற்றிரவு வெளியிட்டார்.

அரசாங்கத்தின் தலைமைச் செயலாளர் என்ற முறையில் முகமட் சிடெக்-கின் பதவிக் காலம் இன்றுடன் முடிவுக்கு வருகிறது.

பெட்ரோனாஸில் நிலவும் பல உள் விவகாரங்கள் தீர்க்கப்பட்டதும் முகமட் சிடெக் அந்தப் பொறுப்பை ஏற்றுக் கொள்வார் என நஜிப் தெரிவித்தார்.

தற்போது பெட்ரோனாஸின் இடைக்காலத் தலைவராக அதன் தலைமை நிர்வாக அதிகாரி சம்சுல் அஸ்ஹார் அபாஸ் பணியாற்றி வருகிறார்.

பொதுச் சேவைத் துறைக்கு முகமட் சிடெக் வழங்கியுள்ள சிறந்த தலைமைத்துவத்தையும் காட்டியுள்ள நேர்மையையும் பாராட்டும் வகையில் அவர் பெட்ரோனாஸ் தலைவராக நியமிக்கப்படுவதாகவும் நஜிப் தெரிவித்தார்.