தஞ்சம் நிராகரிக்கப்பட்டவர்களை திருப்பி அனுப்ப சுவிஸ் முடிவு

சுவிஸ் நாட்டில் தஞ்சம் நிராகரிக்கப்பட்ட இரண்டாயிரத்துக்கும் அதிகமான இலங்கைத் தமிழர்களை திருப்பியனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.

இலங்கையில் போர் முடிந்துவிட்டதால், இவ்வாறு அவர்களை திருப்பியனுப்புவதற்கான இந்த முடிவு 2010 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்டு, 2011-ஆம் ஆண்டு ஜனவரியில் முதல் தடவையாக அறிவிக்கப்பட்டதாக அங்குள்ள செய்தியாளர்கள் கூறுகிறார்கள்.

இருந்தபோதிலும் பொது அமைப்புக்களின் எதிர்ப்பு காரணமாக அந்த முடிவை தற்காலிகமாக ஒத்திவைத்த சுவிஸ் அரசாங்கம், தற்போது மீண்டும் இது தொடர்பாக தஞ்சம் நிராகரிக்கப்பட்டவர்களுக்கு கடிதங்களை அனுப்பி வைத்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் கூறுகின்றன.

ஜெனிவா ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்த சுவிஸ் அரசாங்கம், தற்போது தஞ்சம் நிராகரிக்கப்பட்டவர்களை அங்கு திருப்பி அனுப்புவதற்கு முடிவு எடுத்திருப்பது, அங்குள்ள தமிழர் மற்றும் தஞ்சம் நிராகரிக்கப்பட்டவர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளதாக செய்தியாளர் சண் தவராஜா கூறினார்.

இது குறித்து, அகதிகளுக்கு ஆதரவான அமைப்புக்களுடன் சேர்ந்து தமிழர் அமைப்புக்கள் போராடங்களை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

-BBC

TAGS: