பொதுமேடையில் விவாதம் செய்ய வருமாறு மாற்றரசுக் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்குக்கு மீண்டும் சவால் விடுத்துள்ளார்.
இதற்குமுன் விவாதத்துக்கு வருமாறு அழைக்கப்பட்டபோது, விவாதம் நடத்துவது மலேசியர்களின் அரசியல் கலாச்சாரம் அல்ல என்று நஜிப் கூறியிருந்ததைக் குறிப்பிட்ட அன்வார், அது விவாதம் செய்வதைத் தவிர்ப்பதற்காக சொல்லப்படும் ஒரு சாக்குப்போக்குத்தானே வேறொன்றுமில்லை என்றார்.
“அவர் விவாதம் செய்ய வருவாரா, மாட்டாரா? பள்ளிகளில் விவாதங்களுக்கு ஏற்பாடு செய்திருக்கிறார்…… விவாதங்களில் கலந்துகொள்ள மாணவர்கள் ஊக்குவிக்கப்படுகிறார்கள்…..பரிசாக பிரதமர் கோப்பை வழங்கப்படுகிறது.ஆனாலும் பிரதமர் சொல்கிறார் (விவாதம் செய்தல்)நம் கலாச்சாரம் அல்ல என்று”.
நேற்றிரவு சித்திக் பாட்சில் எழுதிய ‘Islam dan Melayu: Martabat Umat dan Daulat Rakyat’ என்ற நூல் வெளியீட்டு நிகழ்வில் கலந்துகொண்ட பின்னர் அன்வார் செய்தியாளர்களிடம் பேசினார்.
அம்னோ இளைஞர் தலைவர் கைரி ஜமாலுடின் நாடாளுமன்றமே ஒரு விவாத மேடைதானே, தலைவர்கள் அங்கு வாதம் செய்யலாம் என்று கூறியிருப்பதையும் அன்வார் ஏற்கவில்லை.
“நஜிப் எப்போது வந்தார்(நாடாளுமன்றத்துக்கு). நாடாளுமன்றதில் விவாதம் நடப்பதாகக் கூறுகிறார்(ஆனால்) நடப்பதில்லை.
“மக்களைச் சபித்தலும் அடித்தலும் கொலை செய்தலும்தான் மலாய்க் கலாச்சாரமா. ஊடகங்களைத் தவறான முறையில் பயன்படுத்தி மக்களை அசிங்கப்படுத்துவதான் மலாய்க் கலாச்சாரமா?”, என்றவர் வினவினார்.