நஜிப்பின் சீரமைப்பு, அம்னோவுக்கு கசப்பானது!

உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தை அகற்றுதல், அவசரக் காலச் சட்டங்களில் உள்ள மூன்று பிரகடனங்களை அகற்றுதல், நாடு கடத்தல் சட்டம், காவல் குடியிருப்பு, பத்திரிகை உரிமம், காவல்துறை சட்டவிதி 27 போன்றவற்றிலும் சீரமைப்புகளை கொண்டு வருவதாக பிரதமர் நஜிப் அறிவித்ததை கவனமாக பாரட்டும் அதே வேலையில், இவை அரசியல் கண்துடைப்பா அல்லது கானல் நீரா? என வினவுகிறார் சுவாராம் என்ற மனித உரிமை கழகத்தின் தலைவர் கா. ஆறுமுகம்.

காலனித்துவத்தில் மலாயா இருந்ததில்லை, மாறாக வெள்ளைக்காரர்களின் ஆலோசனையில்தான் மலாயா இருந்தது என்று அண்மையில் சில அரைவேக்காடு புத்திஜீவிகள் கருத்துரைத்துள்ளதை சாடிய வழக்கறிஞரான ஆறுமுகம், “அடிமட்ட மக்கள் விடுதலைக்காக ஒன்றுபட்டதை ஒடுக்கி, இனவாத நடுநிலையினர் ஒத்துழைப்போடு ஆங்கிலேயர் மேற்கொண்ட அடக்குமுறைதான் அவசரக் காலச் சட்டமும் உள்நாட்டுச் பாதுகாப்பு சட்டங்களும். அவற்றை அகற்றப்போவதாக அறிவித்த நஜிப், எதற்காக இவ்வளவு காலம் அமைதியாக இருந்து விட்டு இப்போது அறிவித்துள்ளார். இது ஒரு தேர்தல் தந்திரமா?” என்று வினவினார்.

சர்வ சாதரணமான பிரச்சனையான “இண்டர்லோக்” நாவலை அகற்ற தள்ளாடிய அம்னோ தலைவரின் இந்த புதிய அறிவிப்பு, தன்னைப் பொறுத்தவரை மலேசியாவின் உண்மையான மனித உரிமைகளுக்கு ஒரு எட்டாக் கனியாக இருக்கும் என்கிறார் ஆறுமுகம்.

நஜிப் கொண்டுவரவுள்ள இரண்டு புதிய சட்டங்கள் மனித உரிமைகளை பாதுகாக்குமா? அல்லது மோசமாக்குமா? என்றும் அவர் வினவுகிறார்.

அம்னோவின் ஆதிக்க வெறியில் கட்டுண்டு கிடக்கும் மலேசியர்களுக்கு தேவையான அடிப்படை சனநாயக உரிமைகளையும் பத்திரிகை சுதந்திரத்தையும் கொடுப்பதன்வழி அவரது வியூகம் “பெர்காசா” போன்றவற்றை கட்டவிழ்த்து விட்டு, மக்கள் சுதந்திரம் இதுதான் என்று எச்சரிகை விடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. மகாதீர் அப்படித்தான் பயமுறுத்தி வந்தார். 

“ஒரு முழுமையான மாற்றம் நிகழ வேண்டுமானால் அதில் மக்களின் ஈடுபாடு வெகுவாக இருக்கவேண்டும். இங்கே, அதிகாரமும் பலமும் கொண்ட ஒரே இனத்தின் கீழ் அரசாங்கம் கட்டுப்பட்டு கிடப்பதால் உண்மையான மாற்றம் என்பதை அம்னோவால் கொண்டுவர இயலாது” என்ற அவர் “இன உறவுச் சார்புடைய சட்டம்,  குறைந்தபட்ச சம்பளச் சட்டம் மற்றும் உலகளவில் உள்ள மனித உரிமை சாசனங்களை ஏற்றுக்கொண்டு அதன்வழி அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்திற்கு மலேசியாவை உட்படுத்தும் வழிமுறைகளை மலேசியா மேற்கொள்ளவேண்டும்” என்கிறார்.

குறிப்பாக போர்க்குற்றம் மற்றும் இனப்பேரழிவு குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியுள்ள இலங்கையோடு மலேசியா கொண்டுள்ள அணுக்கமான உறவால் அதன் மனித உரிமை சார்புடைய கொள்கைகளை வெற்றிடமாகவே பார்க்க நேர்கிறது என்கிறார்.

நஜிப் தனது அறிவிப்பின்படி தலை நிமிர வேண்டுமானால் அவர் தனது வாயில் போட்டுள்ளதை மெல்ல வேண்டும். அம்னோவுக்கு அது மிகவும் கசப்பானது.