எம்பி முகவரிமீதான ஆட்சேபணைகள் தள்ளுபடி

சிலாங்கூர் மந்திரி புசாஎ அப்துல் காலிட் இப்ராகிம் தம் வாக்காளர் முகவரியை புக்கிட் மெலாவாத்திக்கு மாற்றியதற்கு பொதுவில் எழுப்பப்பட்ட மறுப்பைத் தேர்தல் ஆணையம் தள்ளுபடி செய்தது.

உத்துசான் மலேசியாவில் வெளிவந்த செய்தியின்படி, காலிட்டின் விண்ணப்பம் அவரது மைகார்டில் உள்ள லோட் 173, பத்து 22, கம்போங் பாசிர் தெருந்தோங், புக்கிட் ரோத்தான் என்ற முகவரியின் அடிப்படையில் செய்யப்பட்டிருந்தது.

காலிட்டின் முகவரி மாற்றத்துக்கு, அந்த வட்டாரத்தில் உள்ள பலர், பிகேஆர் உறுப்பினர்கள் உள்பட, எதிர்ப்புத் தெரிவித்தனர்.அதன் தொடர்பில் நேற்று சாபாக் பெர்ணம் மாவட்ட அலுவலகத்தில் 15நிமிடம் பொதுமக்கள் கருத்தைக் கேட்டறிந்த சிலாங்கூர் இசி தலைவர் சுல்கிப்ளி அப்துல் ரஹ்மான் ஆட்சேபணைகளைத் தள்ளுபடி செய்தார். 

காலிட், முதலில் பெட்டாலிங் ஜெயா நாடாளுமன்றத் தொகுதி ஒன்றின் வாக்காளராக பதிவு செய்யப்பட்டிருந்தார்.பின்னர் இசி மேற்கொண்ட சர்ச்சைக்குரிய ஒரு திருத்தத்தின் விளைவாக லெம்பா பந்தாய் வாக்காளரானார்.

லெம்பா பந்தாய் கோலாலம்பூர் கூட்டரசு பிரதேசத்தின்கீழ் வருகிறது.அங்கு மாநிலச் சட்டமன்றத் தொகுதி இல்லை.

அவர் அந்த முகவரியிலேயே வாக்காளராக பதிவு செய்யப்பட்டிருந்தால் அடுத்த பொதுத் தேர்தலில் சிலாங்கூரில் போட்டியிட முடியாது போகும்.ஏனென்றால், ஒருவர் எந்த மாநிலத்தில் குடியிருக்கிறாரோ அந்த மாநிலத்தில்தான் போட்டியிட முடியும்.

ஆனால்,வாக்களிக்கும் முகவரியில் மாற்றம் செய்வது நாடாளுமன்ற இடத்துக்குப் போட்டியிடுவதைப் பாதிக்காது.

காலிட் பண்டார் துன் ரசாக் எம்பி, அத்துடன் சிலாங்கூர் ஈஜோக் சட்டமன்ற உறுப்பினர். 

 

TAGS: