நில விவகாரத்தில் சிலாங்கூர் மாநில அரசுக்கு எதிராக எம்.ஏ.சி.சி யிடம் புகார் கொடுத்தன் வழி, ஊழலுக்கு எதிராக ஊழல் தடுப்பு வாரியத்திடம் புகார் எப்படி வழங்குவது என்பனை ம.இ.கா இளைஞர் பகுதி தெரிந்துகொண்டுள்ளது. அதனை அறிந்து கொள்ளவே அதற்கு 55 ஆண்டுகள் தேவைப்படுகிறது. ஆக, சமூகத்திற்குத் தேவையான, மற்றும் உண்மையான விசயங்களை ஆய்ந்து, அறிந்து, தேர்வு செய்ய கூடிய பக்குவத்தை அடைய இன்னும் அதிக ஆண்டுகள் பிடிக்குமே என்பதனை அறிய கவலையாக உள்ளது.
அரசியலில் முற்றிலும் திவாலான ஒரு கூட்டத்தை வைத்துக் கொண்டு வீதி பிரச்சாரம் செய்துகொண்டிருந்த ஒரு கூட்டம் இப்பொழுதுதான் எம்.ஏ.சி.சி புகார் செய்வதைப் பற்றி அறிந்துள்ளது. இருப்பினும், உண்மை, நேர்மை, சமுதாய, அல்லது தேசிய நலன் குறித்து விசயங்களை ஆராய்ந்து அதற்கு ஒப்ப ஊழல் புகார் செய்யும் பக்குவத்தை எப்பொழுதுதான் அடையப் போகிறதோ தெரியவில்லை.
இப்படிப்பட்ட அறிவாளித்தனம் 5 ஆண்டுகளுக்கு முன் ம.இ.காவுக்கு இருந்திருந்தால், இந்நாட்டில் பாரிசான் 4 மாநிலங்களில் ஆட்சியையே இழந்திருக்காது. பத்து ஆண்டுகளுக்கு முன் இவர்களுக்கு இந்தச் சிந்தனை உதித்திருந்தால், எப்பிங்கம் தமிழ்ப்பள்ளி 3 ஏக்கர் நிலத்தை ம.இ.காவிடம் இழந்திருக்காது. இந்நாட்டு பிரதமரும், ம.இ.காவின் ‘’நம்பிக்கை’’ நாயகனுமான டத்தோஸ்ரீ நஜீப்புக்கு ஸ்கோபியன் ரக நீர் மூழ்கி விவகாரத்தில் இன்று இரண்டு பெண்டாட்டிக்காரன் திண்டாட்டம் ஏற்பட்டிருக்காது. அதனால் நாட்டுக்குப் ஏற்பட்டுள்ள பெரிய அவமானத்தையும் தடுத்திருக்கலாம்.
அவர்கள் எல்லாம் 20 ஆண்டுகளுக்கு முன் இந்தத் திறமையைத், துணிவைப் பெற்றிருந்தால் மைக்காவில் முதலீடு செய்திருந்த 66 ஆயிரம் ஏழை இந்தியர்களின் பணம் பாழாகி இருக்காது. இன்று பல நூறு கோடி வெள்ளிகளுக்கு அதிபதியாக அமர்ந்திருக்க வேண்டிய இனம் வெள்ளிக்கு வெறும் 80 காசு கிடைத்தாலும் போதுமே என்று, கிடைத்ததைக் கையில் வாங்கிக் கொண்டு ஓடும் நிலை வந்திருக்காது, அல்லது நொந்து நூலாகிப்போன மீகோனுக்கும், நாசி லீமாவுக்கும், ஒரே மலேசியா அரிசிக்கும் வயதானவர்கள் வரிசை பிடித்து நடு நிசி வரை அல்லல்படும் அவல நிலையும் நம்பவர்களுக்கு ஏற்பட்டிருக்காது.
அரசாங்கத்தின் முழு செலவில் பட்டதாரிகளளக, தொழில் வல்லுநர்களாக உருவாகியிருக்க வேண்டிய ஆயிரக்கணக்கான இந்திய இளைஞர்கள், வேலை வெட்டியற்ற ஓரங்கட்டப்பட்ட ஒரு கூட்டமாக்கியிருக்காது. பட்டை தண்ணி, பட்டாக் கத்தி தூக்கி சொந்த இனத்தின், சகோதர- சகோதரிகளின் தாலியை அறுக்கும், தங்கத்தைப் பறிக்கும், உயிரைக் குடிக்கும் ஈனச் செயல்களில் ஈடுப்பட்டு சிறைசாலைகள் நிரம்பி வழிய நம்மின இளைஞர்களை இட்டுச் சென்றுள்ள மாபெரும் தேசத் துரோகிகளின் ஏவல்கள் எங்கள் மீது ஊழல் குற்றம் சாட்டுவதா?
கடந்த ஐம்பத்து ஐந்து ஆண்டுகளில் எங்கும் எதிலும் ஊழல். சுரண்டல், ஏமாற்றலின் வழி நாட்டையே திவாலாகும் நிலைக்கு இட்டுச் சென்றுள்ள ஒரு கூட்டம், பள்ளி நிலம், ஆலய நிலம், இடுகாட்டு நிலம் என்று எங்கும் எதிலும் சுரண்டி இச்சமுதாயத்தின் பொருளாதார முதுகெலும்பையே உடைத்துவிட்டு, அடுத்தவர் மீது அற்ப அரசியல் லாபத்திற்குப் பலி சுமத்தப் புறப்பட்டுள்ளது.
விரைந்து விசாரணை செய்ய வேண்டும் எம்.ஏ.சி.சி என்ற ஊழல் ஒழிப்பு ஆணையம். அடுத்த தேர்தல் நேரத்தில் பக்காத்தான் மக்கள் பிரதிநநிதிகள் மக்களைச் சந்திப்பதைத் தடுக்க ம.இ.கா அமைக்கும் வியூகத்துக்கு இது துணை போவதாக அமைந்து விடக்கூடாது என்றார் டாக்டர் சேவியர் ஜெயக்குமார்.