இலங்கையின் வடக்கே மக்கள் தொகை குறைந்துள்ளது

இலங்கையின் வட மாகாணத்திலேயே நாட்டில் குறைந்த அளவிலான மக்கள் வசிக்கிறார்கள் என்று நேற்று வெளியான இலங்கை அரசின் மக்கள் தொகை கணக்கெடுப்பு புள்ளி விபரத் தகவல்கள் அடங்கிய ஆரம்பகட்ட அறிக்கை கூறுகிறது.

முப்பது ஆண்டுகளுக்கு பிறகு நாட்டின் அனைத்துப் பகுதிகளையும் உள்ளடக்கி நடத்தப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பில் வட மாகாணத்தில் 5.2 சதவீதத்துக்கும் குறைவான மக்களே வசிக்கிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிலும் குறிப்பாக மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் ஒரு லட்சத்துக்கும் குறைவானவர்களே வசிப்பதாகவும் இலங்கை அரசின் இடைக்கால அறிக்கை கூறுகிறது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் தான் இலங்கையிலேயே குறைவான மக்கள் வசிக்கிறார்கள். அங்கு அரச கணக்குகளின்படி 92,228 பேர் இருக்கிறார்கள். அது நாட்டின் மக்கட் தொகையில் 0.5 சதவீதமாகும்.

நாட்டிலேயே 28.8 சதவீதத்துக்கும் கூடுதலான மக்கள் மேல் மாகாணத்தில் வாழ்கிறார்கள் எனவும், 2001-2012 காலகட்டத்தில் இலங்கையின் சராசரி மக்கட் தொகை வளர்ச்சி 0.7 சதவீதமாக உள்ளது என்றும் அரசின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது 1981-2012 ஆம் ஆண்டு காலகட்டத்துடன் ஒப்பிடும் போது 0.3 சதவீதம் குறைவானது.

கிழக்கு மாகாணத்தில் நாட்டின் மொத்த மக்கட் தொகையில் 7.6 சதவீதமானவர்கள் வசிக்கிறார்கள். குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில் மக்கள் தொகை வளர்ச்சி தேசிய சராசரியை விட சற்று கூடுதலாக உள்ளது.

TAGS: