வவுனியாவில் கைதிகளால் சிறைகாவலர்கள் சிறைபிடிப்பு

இலங்கையின் வடக்கே வவுனியா சிறைசாலையில், சிறைக் காவலர்கள் மூவரை அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் பணயமாகப் பிடித்து வைத்திருப்பதாக வவுனியா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

வவுனியா சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அரசியல் கைதிகளில் மூன்று பேர் கடந்த செவ்வாய்க்கிழமை பூஸாவில் உள்ள பயங்கரவாதத் தடுப்புப் பிரிவுக்குக் கொண்டு செல்லப்பட்டதையடுத்து, அவர்களை மீண்டும் வவுனியா சிறைச்சாலைக்கே கொண்டுவர வேண்டும் எனக் கோரி, இந்த சிறைக்கைதிகள் புதன்கிழமை முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்தக் கோரிக்கையை வலியுறுத்தும் வகையிலேயே இன்று(28.06.2012) சிறைக்காவலர்கள் மூவர் கைதிகளினால் பிடித்து வைக்கப்பட்டிருப்பதாக காவல்துறையினர் கூறுகின்றனர்.

எனினும் அனுராதபுரம் நீதிமன்றத்திற்கு வழக்குத் தவணைக்காகக் கொண்டு செல்லப்பட்ட தமது சக கைதி ஒருவர் அனுராதபுரம் சிறைச்சாலையில் தனித்து அடைத்து வைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டதாகவும், அவரை மீண்டும் வவுனியா சிறைச்சாலைக்கே கொண்டு வரவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தே நேற்று முதல் இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட்டு வருவதாக அரசியல் கைதிகள் தரப்பில் கூறப்படுகிறது

இரண்டாவது நாளாக இந்த உண்ணாவிரதப் போராட்டம் வியாழக்கிழமை தொடர்ந்து நடைபெற்று வருகின்ற சூழலிலேயே இன்று முன்னிரவு சிறைக்காவலர்கள் மூவர் கைதிகளினால் பிடித்து வைக்கப்பட்டிருக்கின்றார்கள்.

கைதிகளினால் பிடித்து வைக்கப்பட்டிருப்பவர்களை மீட்பதற்கும், வவுனியா சிறைச்சாலையில் ஏற்பட்டுள்ள பதட்ட நிலைமையைக் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கும் சிறையதிகாரிகள் நீதிமன்றத்தின் உதவியை நாடியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

TAGS: