‘சிறீ லங்கா மிர்ரர்’ மற்றும் ‘சிறீ லங்கா எக்ஸ் நியூஸ்’ ஆகிய இரு இணையத் தளங்களின் பணிமனைகளில் காவல்துறையினர் சோதனையிட்டு அவ்விணையத் தளங்களின் ஊடகவியலாளர்கள் உட்பட மொத்தம் ஒன்பது பேரை கைது செய்தனர்.
சோதனை நடத்திய காவல்துறையினர், கணினிகள் மற்றும் தொலைபேசிகளைக் கைப்பற்றினர் என இந்த சோதனைகளை நேரில் பார்த்தவர்கள் கூறினர்.
தற்போது இந்த இரு இணையத் தளங்களின் பணிமனைகள் சீல் வைத்து மூடப்பட்டுள்ளன. அத்துடன் சிறீ லங்கா மிர்ரர் இணைய தளத்தின் மூத்த ஊடகவியலாளர் ஒருவரின் வீட்டையும் காவல்துறையினர் சோதனையிட்டனர்.
எந்தக் காரணத்துக்காக இந்த சோதனைகள் நடத்தப்பட்டன என்பது தெளிவாகவில்லை. சோதனை நடத்திய ஒரு உயர் போலிஸ் அதிகாரியிடம் சோதனைக்கான காரணத்தை கேட்டதாகவும், இந்த இணையத் தளங்கள் அரசுக்கு எதிரான செய்திகளைப் பிரசுரித்ததால், இலங்கைக் குற்றவியல் சட்டம் 118/120-ன் கீழ் கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளபடுகின்றன என்று காவல்துறை அதிகாரி பதில் அளித்ததாகவும் முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர பிபிசியிடம் தெரிவித்தார்.
“இது மஹிந்த ராஜபக்ஷவும் அவரது சகோதரர் கோட்டாபய ராஜபக்ஷவும் ஊடங்களுக்கு எதிராக கடந்த சில ஆண்டுகளாகவே எடுத்து வரும் பழிவாங்கும் நடவடிக்கையின் ஒரு பகுதிதான். சிறீ லங்கா எக்ஸ் இணையத் தளத்தின் தலைமை தொடர்பாளராக இருக்கின்ற மங்கள சமரவீர, இது ஊடக சுதந்திரத்தின் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல் என்றார்.
இந்த இணைய தளங்கள் எதிர்க்கட்சி ஆதரவு இணைய தளங்கள் என்று செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
“ஊடக சுதந்திரம் இலங்கையில் செத்துவிட்டது என்பதற்கு இது ஒரு தெளிவான அத்தாட்சி” என்று ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணநாயக்க தெரிவித்தார்.
இந்த வாரம் முன்னதாகத்தான், இலங்கையில் ஐந்து தமிழ் இணைய தளங்கள் தடுக்கப்பட்டன. கடந்த ஆண்டு நவம்பரில், இலங்கை ஜனாதிபதியைப் பற்றி அவதூறு செய்ததாகக் கூறி, பல இலங்கை இணைய தளங்கள் தற்காலிகமாக தடுக்கப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.