ரிம1பில்லியன் அம்பாங் இலகுரயில் போக்குவரத்து விரிவாக்கத் திட்டக் குத்தகை அதிக விலை குறிப்பிட்டிருந்த ஒரு நிறுவனத்துக்கு வழங்கப்பட்டதில் முறைகேடு இல்லை என்கிறார் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்.
“எல்லாம் முறையாகவே நடந்துள்ளது.முறைகேடு எதுவும் இல்லை”. குத்தகை வழங்குவதில் தலையிட்டார் என்று கூறப்படுவது பற்றி வினவியதற்கு நஜிப் இப்படிச் சுருக்கமாக பதிலளித்தார்.
பிகேஆர் வியூக இயக்குனர் ரபிஸி ரம்லி(இடம்) குத்தகை வழங்குவதில் பிரதமர் தலையிட்டு மற்ற நிறுவனங்களைக் காட்டிலும் கூடுதல் விலையைக் குறிப்பிட்டிருந்த ஜியார்ஜ் கெண்ட் குழுமத்துக்கு அது கிடைப்பதற்கு ஏற்பாடு செய்தார் என்று குற்றம் சாட்டியிருந்தார்.
வியாழக்கிழமை செய்தியாளர் கூட்டமொன்றில் அக்குற்றச்சாட்டைச் சுமத்திய ரபிஸி, அந்தக் குத்தகை முதலில் பல்போர் பியேட்டி-இன்வென்சைஸ் கொன்சோர்டியம்(Balfour Beatty-Invensys Consortium) என்ற குழுமத்துக்குத்தான் வழங்கப்பட்டது என்பதற்கு “வலுவான” ஆதாரம் தம்மிடம் இருப்பதாகச் சொன்னார்.
ஆனால், குத்தகை ஜியார்ஜ் கெண்டுக்குத்தான் கிடைக்கும் என்று ஜனவரி 22-இல், பிசினஸ் டைம்ஸில் ஆருடம் கூறப்பட்டிருந்தது. குத்தகை கைமாறியதற்கு நஜிப்பின் தலையீடுதான் காரணமாக இருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தார் ரபிஸி.
தம் குற்றச்சாட்டுக்கு ஆதரவாக ஜனவரி 25இல் நடந்த நிதி அமைச்சு கொள்முதல் குழு(ஜெபிஎம்கே)வின் கூட்டக் குறிப்பு என்று கூறப்படும் ஒன்றையும் பிகேஆர் வெளியிட்டது.
அதில், நிதி அமைச்சர் என்ற முறையில் நஜிப், இரண்டாம் நிதி அமைச்சர் அஹ்மட் ஹுஸ்னி முகம்மட் ஹனட்ஸ்லா. அமைச்சின் தலைமைச் செயலாளர் வான் அப்துல் அசீஸ் வான் அப்துல்லா ஆகியோர் கையொப்பமிட்டிருந்தனர்.
அந்த ஆவணத்தின்படி, எல்ஆர்டி விரிவாக்கப் பணிகளை மேற்பார்வையிடும் பிராசரானா நெகாரா பெர்ஹாட்(பிராசரானா), அந்த ரிம1,012,910,000குத்தகையை பிடிஏ குழுமத்துக்கு வழங்கலாம் என்று செய்திருந்த பரிந்துரையை ஜெபிஎம்கே நிராகரித்து விட்டதாகத் தெரிகிறது.
அதற்குப் பதிலாக அக்குழு குத்தகையை பல்போருக்கு வழங்க முடிவு செய்து அம்முடிவை பிராசரானாவுக்கும் ஜனவரி 26-இல் எழுதப்பட்ட ஒரு கடிதத்தில் தெரியப்படுத்தியது.ஜெபிஎம்கே அதிகாரி பவுசி யாக்கூப் என்பவரால் எழுதப்பட்ட அக்கடிதத்தின் பிரதி ஒன்றையும் ரபிஸி காண்பித்தார்.
அவர் அந்த ஆவணங்களை வெளிப்படுத்திய அன்றிரவே அவை உண்மையானவையா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள மலேசிய ஊழல்தடுப்பு ஆணைய(எம்ஏசிசி) அதிகாரிகள் அவரைச் சந்தித்தனர்.
ரபிஸி நேற்றுக் காலை எம்ஏசிசி மீது நம்பிக்கை இல்லை என்று குறிப்பிட்டு போலீசில் புகார் ஒன்றைச் செய்தார்.
அதற்குச் சில மணி நேரம் கழித்து எம்ஏசிசி அதிகாரிகள் பிராசரானாவுக்குச் சென்ற செய்தி வெளியில் கசிந்தது.மலேசியாகினி அந்நிறுவனத்தின் ஊடக விவகார நிர்வாகி அஸ்ஹார் கசாலியைத் தொடர்புகொண்டு விசாரித்தபோது “சில விவரங்களைத் தெரிந்துகொள்வதற்காக வந்தார்கள்”, என்றார்.