“சிலாங்கூரில் குற்றச் செயல்கள் கூடியதற்கு EO ரத்துச் செய்யப்பட்டது காரணம்”

சிலாங்கூரில் குற்றச் செயல்கள் கூடியதற்கு அவசர காலச் சட்டம் (EO) ரத்துச் செய்யப்பட்டதும் காரணம் என அந்த மாநில போலீஸ் படைத் துணைத் தலைவர் ஏ தெய்வீகன் கூறுகிறார்.

அந்த அவசர காலச் சட்டம் ரத்துச் செய்யப்பட்ட பின்னர் சிம்பாங் ரெங்காம் தடுப்பு மய்யத்திலிருந்து சந்தேகத்துக்குரிய கிரிமினல்கள் பெரும் எண்ணிக்கையில் விடுவிக்கப்பட்டதின் விளைவாக சிலாங்கூரில் குற்றச் செயல்கள் மீதான புகார்கள் அதிகரித்துள்ளதற்குக் காரணமாக இருக்கக் கூடும் என தெய்வீகன் சொன்னார்.

“அவர்கள் (கைதிகள்) சரியான பாதைக்குத் திரும்பும் பொருட்டு புதிய வாழ்க்கையைத் தொடங்குவதற்கு அவர்களுக்கு வாய்ப்புக் கொடுக்கப்பட வேண்டும் என அரசாங்கம் நம்பிக்கை கொண்டிருந்தது. ஆனால் அவர்கள் சரியான பாதைக்குத் திரும்பி விட்டனரா இல்லையா என்பது எங்களுக்கு இன்னும் தெரியாது.”

“என்றாலும் நாங்கள் அண்மைய காலமாக குற்றச் செயல்கள் அதிகரித்து விட்டதைப் பார்க்கிறோம். காரணம் அவர்கள் நீண்ட காலம் தடுப்புக் காவலில் இருந்து விட்டனர். அவர்களுக்குப் ‘பயிற்சி’ தேவை. ஆகவே  வெளியில் வந்ததும் தங்கள் வேலைகளை உடனடியாகத் தொடங்கி விட்டனர்,” என இன்று காலை சுபாங் ஜெயாவில் கார், மோட்டார் சைக்கிள் திருட்டுக்களை தடுக்கும் வழிகள் மீது ஏற்பாடு செய்யப்பட்ட இயக்கத்தில் தெய்வீகன் பேசினார்.

என்றாலும் பின்னர் நிருபர்கள் அணுகிய போது, சிம்பாங் ரெங்காம் தடுப்பு மய்யத்திலிருந்து சந்தேகத்துக்குரிய கிரிமினல்கள் விடுவிக்கப்பட்டதற்கும் குற்றச் செயல்கள் கூடியிருப்பதற்கும் நேரடித் தொடர்பு இருக்கிறதா என்பதை உறுதி செய்வதற்கு இன்னும் கூடுதலான ஆதாரமும் ஆதாரங்களும் தேவைப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

“நான் அதனை உறுதி செய்ய முடியாது. அதுவாகவும் இருக்கலாம். என்றாலும் அதனை உறுதி செய்வதற்கு எங்களுக்கு கால அவகாசம் தேவைப்படுகின்றது. எங்களுக்கு ஒரிரு மாதங்கள் கொடுங்கள். பின்னர் நாங்கள் உறுதி செய்கிறோம்,” என்றார் அவர்.

இதற்கு முன்னதாக அந்த நிகழ்வில் உரையாற்றிய தெய்வீகன், மொத்த எண்ணிக்கையில் சிலாங்கூரில் குற்றச்செயல்கள் குறைந்துள்ளதாக தெரிவித்தார்.

“மொத்தத்தில் சிலாங்கூரில் இன்று  எல்லாக் குற்றங்களும் 11.2 விழுக்காடு குறைந்துள்ளன. ஆனால் நிச்சயம் மக்கள்  மகிழ்ச்சியாக இல்லை. ஆனால் நாங்கள் எங்களால் முடிந்ததைச் செய்து கொண்டு தான் இருக்கிறோம்,” என்றும் சிலாங்கூர் போலீஸ் படைத் துணைத் தலைவர் சொன்னார்.

 

TAGS: