நஜிப்: சுய-புகழ்பாடும் செய்திகள் சிலாங்கூரை வெற்றிகொள்ள உதவமாட்டா

சிலாங்கூர் பிஎன் தொடர்புக்குழு தலைவரான நஜிப் அப்துல் ரசாக், அம்மாநிலத்தில் பிஎன்னின் வாய்ப்புகள் பற்றித் திசைதிருப்பிவிடும் தகவல்கள் வெளியிடுவதைப்  பங்காளிக்கட்சிகள் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். 2008-இல் பிஎன் அம்மாநிலத்தில் தோற்றதற்கு அதுவே காரணம்.

இன்று ஷா ஆலமில், சிலாங்கூர் பிஎன் மாநாட்டில் உரையாற்றிய பிரதமருமான நஜிப், அப்படிப்பட்ட தகவல்களை வெளியிடுவோர் “தங்களைத் தாங்களே ஏமாற்றிக்கொள்கிறார்கள்”, என்றார்.

“சுயமாக பாராட்டிக்கொண்டு திரியாதீர்கள்” என்று அறிவுறுத்திய நஜிப், 35 ஆண்டுகளாக அரசியலில் இருக்கும் தமக்கு இந்த விளையாட்டு அத்துப்படி என்றார்.

“நமது நிகழ்வில் 300 பேர் கலந்துகொண்டார்கள் அதுவே வெற்றி என்றுகூறும் செய்திகளை நான் நம்புவதில்லை…நிச்சயம் நம்ப மாட்டேன்.

“இப்படிச் சொல்லி உங்களை நீங்களே ஏமாற்றிக்கொள்கிறீர்கள்…அந்த 300 பேரும் தொகுதித் தலைவர்களாக இருப்பார்கள் அல்லது தீவிர ஆதரவாளர்களாக இருப்பார்கள்”. நஜிப், சுமார் மூவாயிரம் பேர் கலந்துகொண்ட மாநாட்டில் பேசினார்.

திசைதிருப்பிவிடும் இப்படிப்பட்ட செய்திகளால்தான் 2008 தேர்தலில் சிலாங்கூரில் பிஎன் தோற்றுப்போனது. இல்லையேல் சரிந்துகொண்டிருந்த ஆதரவைத் தடுத்து நிறுத்தியிருக்க முடியும்.

“பிஎன்னில் பிரச்னை என்னவென்றால், நம்மை வலிமை மிக்கவர்களாக நினைத்துக்கொள்கிறோம். (2008-இல்) சரியான தகவல்கள் கிடைத்திருந்தால் சிலாங்கூரில் தோற்றிருக்க மாட்டோம், தக்க நடவடிக்கை எடுத்து நிலைமையைச் சரிசெய்திருப்போம்”, என்றாரவர்.

சிலாங்கூர் பிஎன்னைத் தட்டி எழுப்ப  வேண்டும் என்பதற்காக கடுமையாக பேசிய நஜிப், சிலாங்கூரில் தோல்விக்கான காரணத்தை அது ஆராய வேண்டும், சிலாங்கூரைத் திரும்பவும் கைப்பற்றும் முயற்சிக்கு அது மத்திய அரசையே நம்பிக்கொண்டிருக்கக் கூடாது என்றும் கூறினார். .

சிலாங்கூரில் தான் அதிகாரத்தில் இல்லை என்பதை சிலாங்கூர் பிஎன் இன்னமும் உணரவில்லைபோலத் தெரிவதாக அவர் சொன்னார்.  “தந்தையின்” இடத்தில் இருந்துகொண்டு“கேட்பதைக் கொடுக்க” மத்திய அரசு இருக்கிறது என்று அது நினைப்பதுபோலவும் தெரிகிறது என்றாரவர்.

“உள்சண்டையாலும் நமக்கு நட்டம்”

உள்சண்டைகளாலும் பிஎன் பாதிப்படைந்ததாகக் கூறிய நஜிப், அதன் விளைவாக உறுப்பினர் சிலர் நம்பிக்கைத் துரோகம் செய்துவிட்டார்கள் என்றார்.

“இந்த நம்பிக்கைத்துரோகம் இல்லையென்றால், தோற்றுப்போயிருக்க மாட்டோம்.”

பிஎன் தலைவர்கள் அனைவருமே, தாங்கள் தேர்தலில் போட்டியிட தெரிவுசெய்யப்படவில்லை என்பதற்காக வேட்பாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு எதிராகக் கீழறுப்பு வேலையில் இறங்க மாட்டோம் என உறுதிமொழி எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் நஜிப் கூறியதை அவையினர் ஆரவாரத்துடன் வரவேற்றனர்.

“தாங்கள் தெரிவுசெய்யப்படவில்லை என்றாலும்  வேட்பாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை ஆதரிக்க ஆயத்தமாக இருக்கிறார்களா? அவர்கள் அதைச் செய்தால் வெற்றி நமக்குத்தான்.”

சிலாங்கூர் பிஎன் மாநாடு, 2008 பொதுத் தேர்தலில் சற்றும் எதிர்பாராத வகையில் பிஎன்னைத் தோல்வியுற வைத்து சிலாங்கூரைப் பறித்துக்கொண்ட பக்காத்தான் ரக்யாட்டிடமிருந்து ஆட்சியைத் திரும்பக் கைப்பற்றும் திட்டங்களை வகுக்கும் நோக்கத்துடன் கூட்டப்பட்டிருந்தது.

பிரதமர் எந்த நேரத்திலும் பொதுத் தேர்தலை நடத்தலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. ஆனால், நாடாளுமன்றம் கலைக்கப்படும்போது  மாநிலச் சட்டமன்றத்தையும் கலைக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை என்று சிலாங்கூர் அரசு கூறியுள்ளது.

அம்மாநாட்டில், பிபிபி தலைவர் எம்.கேவியஸ், சிலாங்கூர் கெராக்கான் தலைவர் ஏ.கோகிலன் பிள்ளை, மஇகா தலைவர் ஜி.பழனிவேல், சிலாங்கூர் மசீச தலைவர் டோனல்ட் லிம், சிலாங்கூர் பிஎன் தொடர்புக்குழுத் துணைத் தலைவர் நோ ஒமார், பிஎன் தலைமைச் செயலாளர் தெங்கு அட்னான் தெங்கு மன்சூர் முதலானோரும் கலந்துகொண்டனர்.

TAGS: