ஒன்றுபட்ட இலங்கைக்கு இந்தியா ஆதரவு: சிவசங்கர் மேனன்

கொழும்பு: ஒன்றுபட்ட இலங்கைக்கு, இந்தியா என்றும் உறுதுணையாக இருக்கும் என,இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் தெரிவித்துள்ளார்.

இலங்கையில், விடுதலைப் புலிகளுடனான போர் முடிந்த பிறகு, மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கு இந்தியா, 4,000 கோடி ரூபாய் அளவுக்கு கடனுதவி அளித்து வருகிறது. மேலும், 2,000 கோடி ரூபாய் உதவித் தொகையாக அளிக்கவும் ஒப்புக் கொண்டுள்ளது.

இதன்படி, இலங்கையில் நடக்கும் சீரமைப்பு நடவடிக்கைகளை, இந்திய அதிகாரிகள் சென்று பார்வையிட்டு வருகின்றனர். தமிழர்களை மறுகுடியமர்த்துவது தொடர்பான பணிகள், எல்லை தாண்டி செல்லும் மீனவர்கள் சந்திக்கும் பிரச்னைகள் உள்ளிட்டவைகள் குறித்து பேசுவதற்காக, இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் கொழும்பு சென்றுள்ளார்.

நேற்று முன்தினம், அந்நாட்டு அதிபர் ராஜபக்ஷேவை, அவர் சந்தித்துப் பேசினார். இலங்கை பாதுகாப்பு செயலர் கோத்தபையாவையும், பொருளாதார மேம்பாட்டுத்துறை அமைச்சர் பசில் ராஜபக்சேவையும் சந்தித்துப் பேசினார்.

இலங்கை அரசு, தமிழர்கள் பகுதியில் மேற்கொண்டு வரும், அரசியல் நல்லிணக்க நடவடிக்கைகள் குறித்தும், சீரமைப்பு நடவடிக்கைகள் குறித்தும், அதிபரிடம் பேசினேன். தமிழ் தேசிய கூட்டணி தலைவர் சம்பந்தத்தையும் சந்தித்துப் பேசினேன்.

ஒன்றுபட்ட இலங்கைக்கு, இந்தியா முழு ஆதரவளிக்கிறது. இலங்கையில் அனைத்து மக்களும் சமமாக மதிக்கப்பட வேண்டும் என்பது தான், இந்தியாவின் நிலை. தமிழர்கள் வசிக்கும் பகுதியில் நடக்கும் சீரமைப்பு நடவடிக்கைகளுக்கு இந்தியா முழு ஒத்துழைப்பு அளிக்கும்.

எல்லை தாண்டி மீன் பிடிக்கும் மீனவர்கள் விஷயம் தொடர்பாக, கடந்த 2008ல் சுமுக நிலை ஏற்படுத்தப்பட்டது. இருதரப்பு மீனவர்கள் சங்கத்தினரின் கோரிக்கைகள் ஏற்கப்பட்டன. இதில், இன்னும் சில மனிதாபிமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது என்றார்.

TAGS: