பொது இடங்களில் தம்மை அடிக்கடி அச்சுறுத்தும் பெர்க்காசா தீவிரவாதிகளிடமிருந்து தம்மை பாதுகாக்க போலீஸ் மீண்டும் தவறி விட்டதாக பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் கூறியிருக்கிறார்.
நேற்று தெலுக் பாகாங் சந்தைக் கூடத்தில் நிகழ்ந்த சம்பவம் பற்றிக் குறிப்பிட்ட போது அவர் அவ்வாறு சொன்னார்.
போலீசார் மிகவும் தாமதமாக நடவடிக்கை எடுத்ததால் பெர்க்காசா உறுப்பினர்கள் தம் மீது பொருட்களை எறிவதற்கு வழி ஏற்பட்டு விட்டதாகவும் லிம் குறிப்பிட்டார்.
“போலீசார் நடவடிக்கை எடுக்காமல் இருந்ததால் துணிச்சலடைந்த பெர்க்காசா உறுப்பினர் ஒருவர் என் மீது பின்னுக்கு இருந்து பாய்ந்ததார். அவர் என்னைக் கடுமையாக இடித்து விட்டார்.”
“நல்ல வேளையாக எனக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை. பக்காத்தான் ராக்யாட் தலைவர் ஒருவர் அந்த பெர்க்காசா உறுப்பினரை இழுத்திருக்கா விட்டால் எனக்கு காயம் ஏற்பட்டிருக்கக் கூடும்,” என லிம் இன்று விடுத்த பத்திரிக்கை அறிக்கை தெரிவித்தது.
போலீசார் தம்மைப் பாதுகாக்கத் தவறியதே கடுமையான விஷயமாக இருக்கும் வேளையில் என்னைத் தாக்க முற்பட்டவரைப் போலீஸ் கைது செய்யாமல் போனது மிகவும் ஏமாற்றத்தை அளித்துள்ளது என்றும் லிம் குறிப்பிட்டார்.
“அந்தச் சம்பவத்தில் பிரதமரோ, சீன பக்காத்தான் ராக்யாட் முதலமைச்சராக இல்லாமல் இருந்தாலோ போலீசாரின் நடவடிக்கை எவ்வளவு கடுமையாக இருக்கும் என்பதை நினைத்துப் பாருங்கள்.”
வன்செயல்கள் தொடருகின்றன
தம்முடைய தெலுக் பாகாங் வருகை குறித்து போலீசாருக்கு ஏற்கனவே தகவல் கொடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர்கள் போதுமான பாதுகாப்பைத் தமக்கு கொடுத்திருக்க வேண்டும் என்றும் லிம் வலியுறுத்தினார்.
பொது மக்கள், நிருபர்கள், பக்காத்தான் தலைவர்கள் ஆகியோருக்கு எதிராக பெர்க்காசா தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்டு வருகின்றது என்றும் அதற்கு முழு விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக தோன்றுகிறது என்றும் பினாங்கு முதலமைச்சர் வருத்தத்துடன் சொன்னார்.
லிம் அந்த சந்தைக் கூடத்தில் நடந்து சென்று மக்களுடன் உரையாடிய வேளையில் 50 பெர்க்காசா ஆதரவாளர்கள் கூட்டம் நடத்திக் கொண்டிருந்தனர்.
அந்த சந்தைக் கூடத்தில் ஒரு கடையில் லிம் குவான் எங் சுவரொட்டிகள் நிறைய ஒட்டப்பட்டிருந்தன என தி ஸ்டார் ஏடு கூறியது.
அந்தப் பகுதியிலிருந்து லிம் வெளியேறிய தருணத்தில் பெர்க்காசா உறுப்பினர் ஒருவர் அவர் மீது பாய்ந்தார் என்றும் அடுத்து கைகலப்பு மூண்டதாகவும் அறிவிக்கப்பட்டது. அருகில் இருந்த போலீசார் பின்னர் தலையிட்டனர்.
தமக்கு எதிராக முரட்டுத்தனம் பிரயோகிக்கப்பட்டதாக பெர்க்காசா உறுப்பினர் ஒருவர் தமது போலீஸ் புகாரில் தெரிவித்துள்ளார்.