உலகிலேயே நீளமான பாலம் ரஷியாவில் கட்டப்பட்டுள்ளது

ரஷியாவில் விலாடி வோஸ்டாக் நகரையும் ருஸ்கி தீவையும் இணைக்கும் வகையில் மிக நீளமான பாலம் கட்டப்பட்டுள்ளது. இது 1,104 மீட்டர். அதாவது 3622 அடி நீளம் கொண்டது. இந்த பாலம் ரூ. 1 லட்சத்து 10 ஆயிரம் கோடி செலவில் கேபிள்கள் (கம்பி வடம்) மூலம் கட்டப்பட்டுள்ளது.

ருஸ்கி தீவில் வருகிற செப்டம்பர் மாதம் ஆசிய- பசிபிக் பொருளாதாரம் ஒத்துழைப்பு மாநாடு நடைபெற உள்ளது. அதைத் தொடர்ந்து இந்த பாலம் திறப்பு விழா நேற்று நடந்தது. அதை ரஷிய பிரதமர் டிமிட்ரி மெத்வதேவ் திறந்து வைத்தார்.

இதையடுத்து அவர் டெலிவிஷனில் உரை நிகழ்த்தினார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்த பாலம் நடைபெற உள்ள ஆசிய- பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு மாநாட்டுக்காக கட்டப்படவில்லை. ரஷிய மக்களுக்காக கட்டப்பட்டுள்ளது. உலகிலேயே மிக நீளமான பாலம் கட்ட வேண்டும் என்ற கனவு ஒருங்கிணைந்த சோவியத் யூனியனுக்கு இருந்தது. இன்று அந்த கனவு நிறைவேறியுள்ளது என்று தெரிவித்தார்.

இதற்கு முன்பு சீனாவில் யாஸ்ட் ஷு ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட கேபிள் பாலம்தான் உலகிலேயே மிக நீளமான பாலம் என்ற பெருமையை பெற்றது. தற்போது அந்த பெருமை ரஷியாவுக்கு கிடைத்துள்ளது.