“என்னை ஏன் இவ்வளவு வெறுக்கிறார் என்பது எனக்குத் தெரியவில்லை”

‘மகாதிரிசம்’ என்று கூறப்படுவதைப் புறந்தள்ளிய முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட், மாற்றரசுக்கட்சித் தலைவர் லிம் கிட் சியாங் தம்மைத் திரும்பத் திரும்பத் தாக்கிக் கொண்டிருந்தால் அது அவரையே திருப்பித் தாக்கும் என்று எச்சரித்தார்.

“மகாதிரிசம் என்று எதுவுமில்லை.நான் நாட்டுக்குச் சேவை செய்தேன். அவ்வளவுதான். மலேசியக் குடிமகன் என்ற முறையில் என் நாட்டை ஆதரிப்பதும் அது நல்லபடியாக இருப்பதை உறுதிசெய்வதும் என் கடமையாகும்”, என்று மகாதிர் நேற்று மலேசியாகினியிடம் தெரிவித்தார்.

13வது பொதுத் தேர்தலில் பிஎன் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக மகாதிர் அவரது பாணியிலான மக்களைப் பிளவுபடுத்தும் இனவாத அரசியலை இரகசியமாக புகுத்தி வருகிறார் என்று லிம் குறிப்பிட்டிருப்பது பற்றிக் கருத்துரைத்தபோது அவர் இவ்வாறு கூறினார்.

அண்மையில் வலைப்பதிவு ஒன்றில் எதிர்வரும் தேர்தலில் சீனர்களே “ஆட்சியாளர்களைத் தீர்மானிக்கும் ஆற்றலுள்ளோராக” இருப்பார்கள் என்று கூறியிருப்பதன்வழி, மகாதிர் மலாய்க்காரர்களின் மனத்தில் அச்ச உணர்வை விதைத்திருப்பதாகவும் லிம் குற்றம் சாட்டினார்.

“என்னை ஏன் இவ்வளவு வெறுக்கிறார் என்பது எனக்குத் தெரியவில்லை”, என்று முன்னாள் பிரதமர் குறைப்பட்டுக் கொண்டார்.

டிஏபி தம்மீது வசைமாரி பொழிவது பிஎன்னுக்குத்தான் நல்லதாக அமையும் என்று கூறிய மகாதிர், முன்னாள் பிரதமர் அப்துல்லா அஹமட் படாவி தம்மை மரியாதைக்குறைவாக நடத்தியதால் அவரை வாக்காளர்கள் நிராகரித்தனர் என்றார்.

“முன்பு அப்துல்லா என்னிடம் நல்லவிதமாக நடந்துகொள்ளவில்லை அதனால் மக்கள் பிஎன்னை ஆதரிக்கவில்லை.ஏதோ இன்னும் சிலர் என்மீது அனுதாபம் கொண்டிருக்கிறார்கள்.”

நஜிப்பைக் கட்டுப்படுத்தி வைத்திருக்கவில்லை

பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் இவர் சொல்வதைக் கேட்டுத்தான் செயல்படுகிறார் என்று கூறப்படுவதையும் மகாதிர் மறுத்தார். திரும்பவும் ஆட்சிக்கு வரும் எண்ணமெல்லாம் கிடையாது என்றார்.

“நஜிப் என் கட்டுப்பாட்டில் இருந்தால்,நிலைமை வேறுவிதமாக இருக்கும்”, என்று பொதுத் தேர்தலின் தொடர்பில் தாம் பின்னணியிலிருந்து செயல்படுவதாகக் கூறப்படுவதை மறுத்தார்.

அவர் பொறுப்பில் இருந்திருந்தால் 2008 பொதுத் தேர்தலில் பிஎன் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையை இழந்திருக்குமா என்று வினவியதற்கு உறுதியாக சொல்வதற்கில்லை என்றார் மகாதிர்.

“22ஆண்டுக்காலம் ஆட்சியில் இருந்தேன். அதனால் எனக்குக் கூடுதல் அனுபவம் உண்டு.ஒருவேளை வேறு மாதிரியாகவும் அமைந்திருக்கலாம்.

“இதற்கெல்லாம் காரணம் அப்துல்லாதான்.நாங்கள் எதையெல்லாம் கட்டிக்காத்தோமோ அதையெல்லாம் அழித்தார். கட்சியை அழித்தார், பங்காளிக்கட்சிகளையும் அழித்தார்”, என்று மனம் குமுறினார் மகாதிர்.பிஎன்மீது அரசாங்க ஊழியர்கள் வைத்திருந்த நம்பிக்கை தேய்ந்து போனதற்கும் அப்துல்லாவே காரணம் என்றார்.

கிளானா ஜெயாவில் பேரடைம் மாலில்(Paradigm Mall) ‘த லோஃப்’-இன் ஒன்பதாவது கடையைத் திறந்துவைத்த பின்னர் மகாதிர் செய்தியாளர்களிடம் பேசினார்.

‘த லோஃப்’ (The Loaf) என்பது ஜப்பானியர்-பாணி வெதுப்பகமும் (ரொட்டி சுடும் இடம்) உணவகமுமாகும்.2006-இல் தொடங்கப்பட்ட அந்த உணவகத்தில் மகாதிரும் ஒரு பங்குதாரர் ஆவார்.

அதன் திறப்புவிழாவில், தம் பிறந்த நாளை முன்கூட்டியே கொண்டாடும் வகையில் அவரின் தொழில் பங்காளி ஜிரோ சுசுகி அன்பளிப்புச் செய்த  ‘கேக்’ ஒன்றையும் வெட்டினார் மகாதிர்.ஜூலை 10 அவரின் பிறந்த நாள்.அன்று அவருக்கு வயது 87 ஆகும்.