டிஏபி அடுத்த பொதுத் தேர்தலில் மொத்தமுள்ள 222 நாடாளுமன்றத் தொகுதிகளில் 90ல் போட்டியிட்டு புத்ராஜெயாவை பக்காத்தான் ராக்யாட் கைப்பற்றுமானால் தனது தலைவர் பிரதமராக நியமிக்கப்படுவதற்கு வகை செய்துள்ளதாக உத்துசான் மலேசியா இன்று முதல் பக்கத்தில் வெளியிட்ட தலைப்புச் செய்தியை டிஏபி நிராகரித்துள்ளது.
அந்தச் செய்தி “குப்பை,குப்பை, குப்பை” என டிஏபி சோஷலிச இளைஞர் பிரிவுத் தலைவர் அந்தோனி லோக் கூறினார். அவர் பக்காத்தான் ராக்யாட் இட ஒதுக்கீட்டுக் குழுவில் அங்கம் பெற்றுள்ளார்.
“மூன்று பக்காத்தான் கட்சிகளில் குறைந்த எண்ணிக்கையிலான இடங்களில் போட்டியிடப் போவது டிஏபி ஆகும். இட ஒதுக்கீட்டுப் பேச்சுக்கள் இன்னும் தொடருகின்றன. ஆகவே அந்தச் செய்தி முழுக்க முழுக்க உண்மையில்லாதது. பினாங்கு கோலாலம்பூர் தவிர மற்ற மாநிலங்களில் நாங்கள் குறைவான இடங்களிலேயே போட்டியிடுகிறோம்,” எனத் தொடர்பு கொள்ளப்பட்ட போது அவர் கூறினார்.
அந்தச் செய்தியை ‘கெட்ட நோக்கம் கொண்டது’ என வருணித்த ராசா எம்பி-யுமான லோக், அது மலாய்க்காரர்களிடையே அச்சத்தை ஏற்படுத்துவதற்கான இன்னொரு முயற்சி என்றார்.
“எதிர்க்கட்சிகளுக்கு ஆதரவான” வலைப்பதிவு எனக் கருதப்படும் suarapakatanrakyat.com-ல் வெளியான தகவல் அடிப்படையில் அந்தச் செய்தியை உத்துசான் மலேசியா வெளியிட்டுள்ளது. அந்த மூன்று எதிர்க்கட்சிகளுக்கு இடையில் இட ஒதுக்கீடு மீதான விவாதங்களில் அந்த முடிவு செய்யப்பட்டதாக அந்த வலைப்பதிவு கூறிக் கொண்டது.
பாஸ் கட்சிக்கு 80 இடங்கள் வேண்டும் என அதன் தலைவர் அப்துல் ஹாடி அவாங் விரும்பிய போதிலும் அது 66 இடங்களில் மட்டுமே போட்டியிடும் என்றும் பிகேஆர் கட்சிக்கு 2008ம் ஆண்டு அது போட்டியிட்ட 97 இடங்களுடன் ஒப்பிடுகையில் 66 இடங்கள் மட்டுமே கொடுக்கப்படும் என்றும் அந்த வலைப்பதிவை மேற்கோள் காட்டி உத்துசான் செய்தி கூறியது.
அதனால் டிஏபி-க்கு போட்டியிடுவதற்குக் கூடுதலாக 43 இடங்கள் கிடைக்கும். அதனைத் தொடர்ந்து தனது தலைவரைப் பிரதமராக நியமிக்கும் வலிமையை அந்தக் கட்சி பெறும் என்றும் உத்துசான் செய்தி கூறிக் கொண்டது.
“அத்துடன் மலாய் வாக்குகளும் மூன்று பகுதிகளாகச் சிதறியுள்ளன. அதனால் மலாய்க்காரர்களையும் மலாய்க்காரர் அல்லாதாரையும் சம எண்ணிக்கையில் உள்ள நாடாளுமன்றத் தொகுதிகளில் டிஏபி எளிதாக வெற்றி பெற முடியும்,” என்றும் அது குறிப்பிட்டது.
உத்துசான் தனது செய்திக்கு ஆதரவாக அம்னோ சார்புடையவை எனக் கருதப்படும் www.mykmu.net, www.pisau.net ஆகிய இரண்டு வலைப்பதிவுகளையும் குறிப்பிட்டுள்ளது.
‘மூத்த சகோதரர் பங்கு’
புத்ராஜெயாவைக் கைப்பற்றுவதற்கு எதிர்க்கட்சிகள் தவறினாலும் “பாஸ், பிகேஆர் கட்சிகளைக் காட்டிலும் டிஏபி மூன்று அல்லது நான்கு படிகள் முன்னுக்கு நிற்கும்” என www.mykmu.net வலைப்பதிவில் எழுதப்பட்டுள்ளதும் அந்தச் செய்தியில் பெரிதாக பிரசுரிக்கப்பட்டுள்ளது. அதனால் எதிர்த்தரப்புக் கூட்டணியில் டிஏபி “மூத்த சகோதரராக” கருதப்படும்
இட ஒதுக்கீடு அடுத்த பொதுத் தேர்தலில் டிஏபி அதிக இடங்களை வெல்வதற்கு வழி வகுத்துள்ளது என்றும் அதனால் பாஸ், டிஏபி-யின் கைப்பாவையாகவும் பிகேஆர் டிஏபி-யின் வலுவான ஆதரவாளராகவும் மாறும் என்றும் அந்த வலைப்பதிவு கூறியது.
“மலாய்க்காரர் அல்லாத பிகேஆர் பேராளர்கள் ஆதரவுடன் சாத்தியமான பிரதமராக அன்வார் இப்ராஹிம் இருக்க மாட்டார். மாறாக டிஏபி தலைவருக்கே அந்த வாய்ப்பு கிடைக்கும். மலாய் உணர்வுகளைக் கவனிப்பதற்கு அன்வார் நியமிக்கப்பட்டாலும் அவர் பேராக்கில் ஏற்கனவே நிகழ்ந்ததைப் போன்று கைப்பாவையாக மட்டுமே இருக்க முடியும்,” என அந்த வலைப்பதிவு தெரிவித்தது.