தெற்கு சூடான் நாடு தனது முதல் சுதந்திர நாளை கொண்டாடியது. இதனால் நாடு முழுவதும் மக்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
ஆப்ரிக்க நாடான சூடான் நாடு கடந்த 2011-ஆம் ஆண்டு 9-ஆம் தேதியன்று சூடான், தெற்கு சூடான் என இரண்டாக பிரிக்கப்பட்டது. கடந்த 2005-ஆம் ஆண்டு ஏற்பட்ட ஒப்பந்தத்தின் படி இதற்கு ஐ.நா. அங்கீகாரம் வழங்கியது.
இதனால் ஐ.நா.உறுப்பு நாடுகளில் தெற்கு சூடான் இணைந்தது. இதன் அதிபராக சல்வாகிர் உள்ளார். எண்ணெய் வளம் மிக்க தெற்கு சூடான் இன்னமும் எல்லைப்பிரச்னையால் சூடானுடன் போரிட்டு வருகிறது. இதற்கு காரணம் எண்ணெய் வயல்கள் உள்ள பகுதி சூடான் வசம் இருப்பதே என கூறப்படுகிறது.
இந்நிலையில் தெற்குசூடான் நேற்று நள்ளிரவு தனது முதல் சுதந்திர நாளை கோலாகலமாக கொண்டாடியது. நகரமெங்கும் மக்கள், இளைஞர்கள் உற்சாக வெள்ளத்தில் பேரணியாக சென்றனர்.
அதிபர் சல்வாகிர் கூறுகையில், 2015-ஆம் ஆண்டில் தெற்கு சூடான் உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெறும். அதனை நிறைவேற்றுவதை இலக்காக கொண்டுள்ளோம் என்றார்.