ஹாடி: பக்காத்தானில் மிகவும் வலுவானது பாஸ் கட்சியே, டிஏபி அல்ல

அடுத்த பொதுத் தேர்தலில் டிஏபி அதிகமான நாடாளுமன்றத் தொகுதிகளில் போட்டியிடும் எனச் சொல்லப்படுவதை பாஸ் கட்சி தலைவர் அப்துல் ஹாடி அவாங் நிராகரித்துள்ளார். பக்காத்தான் ராக்யாட் கூட்டணியில் அந்த இஸ்லாமியக் கட்சியே வலிமை வாய்ந்தது என அவர் சொன்னார்.

டிஏபி-யைக் காட்டிலும் கூடுதலான இடங்களில் பாஸ் போட்டியிடும் என்றும் மாராங் எம்பி-யுமான அவர் சொன்னதாக சினார் ஹரியான் இன்று செய்தி வெளியிட்டுள்ளது.

“பக்காத்தானில் பாஸ் கட்சியே மிகவும் வலிமையானது. நாங்கள் 80 இடங்கள் வரையில் போட்டியிடக் கூடும். டிஏபி 50 முதல் 60 இடங்களில் வேட்பாளர்களை  நிறுத்தலாம். அதில் டிஏபி 40 முதல் 50 இடங்களில் வெற்றி பெறலாம்.”

“அந்த இடங்களைக் கொண்டு டிஏபி அரசாங்கத்தை அமைக்கவே முடியாது. காரணம் பக்காத்தானுக்கு முதுகெலும்பாக விளங்குவது மலாய் இஸ்லாமியக் கட்சியான பாஸ் ஆகும்,” என அவர் மாராங்-கில் கூறியதாக அந்த ஏடு குறிப்பிட்டது.

பாஸ் கட்சியின் வலிமையை அதன் திறமையான தேர்தல் எந்திரத்திலிருந்து உணர முடியும் எனக் குறிப்பிட்ட ஹாடி அதனால்மற்ற பக்காத்தான் உறுப்புக் கட்சிகளினால் போட்டியிட முடியாத தொகுதிகளில் கூட பாஸ் வேட்பாளர்களை நிறுத்த முடிவதாகச் சொன்னார்.

டிஏபி அடுத்த பொதுத் தேர்தலில் மொத்தமுள்ள 222 நாடாளுமன்றத் தொகுதிகளில் 90ல் போட்டியிட்டு புத்ராஜெயாவை பக்காத்தான் ராக்யாட் கைப்பற்றுமானால் தனது தலைவர் பிரதமராக நியமிக்கப்படுவதற்கு வகை செய்துள்ளதாக உத்துசான் மலேசியா நேற்று முதல் பக்கத்தில்  வெளியிட்ட தலைப்புச் செய்தி குறித்து ஹாடி கருத்துரைத்தார்.

அந்தச் செய்தியை நிராகரித்த டிஏபி, அது மலாய்க்காரர்களிடையே அச்சத்தை ஏற்படுத்துவதற்கான இன்னொரு முயற்சி என வருணித்தது.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னரே பக்காத்தான் கட்சிகளுக்கு இடையில் இட ஒதுக்கீடுகள் இறுதியாக்கப்படும் என்றும் ஹாடி தெரிவித்தார்.

என்றாலும் அடுத்த பொதுத் தேர்தலில் கூட்டரசு அரசாங்கத்தை அமைக்கும் வாய்ப்பு பக்காத்தானுக்குக் கொடுக்கப்பட்டாலும் அந்தக் கூட்டணிக்கு டிஏபி தலைமை தாங்காது என அவர் மீண்டும் உறுதி அளித்தார்.

2008 பொதுத் தேர்தலில் பாஸ் 66 நாடாளுமன்றத் தொகுதிகளில் போட்டியிட்டது. ஆனால் 23ல் மட்டுமே வெற்றி பெற்றது. டிஏபி 47ல் போட்டியிட்டு 28-ஐயும் பிகேஆர் 97ல் போட்டியிட்டு 31 இடங்களையும் வென்றன.

என்றாலும் மாநிலச் சட்டமன்றங்களுக்கான தேர்தலில் பாஸ் கட்சியே அதிகமான இடங்களைப் பிடித்தது. அதற்கு 81 இடங்கள் கிடைத்தன. என்றாலும் கடந்த ஆண்டு நிகழ்ந்த சரவாக் சட்டமன்றத் தேர்தல்களுக்குப் பின்னர் டிஏபி வசம் இருந்த சட்டமன்றத் தொகுதிகளில் எண்ணிக்கை 83 ஆக அதிகரித்தது.

 

TAGS: