உத்துசான் மலேசியாவும் டிவி3-வும் WWW1 கார் எண் தகடு தொடர்பில் அவதூறான செய்திகளை வெளியிட்டதாக கூறப்படுவது மீது அவற்றுக்கு எதிராக முன்னாள் பேராக் மந்திரி புசார் முகமட் நிஜார் ஜமாலுதின் 50 மில்லியன் ரிங்கிட் வழக்கைத் தொடுத்துள்ளார்.
கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் அந்த வழக்கு சமர்பிக்கப்பட்டுள்ளது. அந்த இரண்டு ஊடக நிறுவனங்களும் ‘அவதூறான’ செய்திகளை மீண்டும் வெளியிடுவதற்குத் தடை உத்தரவு பிறப்பிக்குமாறும் அந்த வழக்கில் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.
டிவி3 அவதூறான வழியில் தமது டிவிட்டர் தகவலை வெளியிட்டது என்றும் அதற்கு அடுத்த நாள் உத்துசான் தமது டிவிட்டர் செய்தியை திரித்து வெளியிட்டது என்றும் நிஜார் கூறிக் கொண்டுள்ளார்.
WWW1 கார் எண் தகடை ஜோகூர் ஆட்சியாளர் 520,000 ரிங்கிட்டுக்கு ஏலத்துக்கு எடுத்தது தொடர்பிலான தமது டிவிட்டர் தகவலை ‘தில்லுமுல்லு’ செய்ததற்காக அந்த இரண்டு நிறுவனங்களும் ஏழு நாட்களுக்குள் மன்னிப்பு கேட்க வேண்டும் என கடந்த ஜுன் மாதம் 27ம் தேதி நிஜார் காலக்கெடு விதித்தார்.
டிவிட்டர் செய்தியைத் தொடர்ந்து நிஜாருக்கு எதிராக 41 புகார்களை பெற்ற பின்னர் போலீசார் அவரை விசாரிக்கத் தொடங்கியுள்ளனர்.