ஏப்ரல் 28ம் தேதி பெர்சே 3.0 பேரணி நிகழ்ந்த போது டிபிகேஎல் என்ற கோலாலம்பூர் மாநகராட்சி மன்றத் தலைமையகக் கட்டிடத்தில் உள்ள சிஐஎம்பி வங்கி கிளையில் “தரையில் விழுந்து வலியால் துடித்துக் கொண்டிருந்த” இளம் மாது ஒருவரை போலீசார் ‘உதைத்தனர்.
அவருக்கு ஏற்கனவே கையில் காயங்கள் ஏற்பட்டிருந்தன என்று சுஹாக்காம் என்ற மனித உரிமை ஆணையம் நடத்தும் பொது விசாரணையில் கலந்து கொண்ட சாட்சி ஒருவர் கூறினார்.
தரையில் கிடந்த போது மூச்சு விட அந்த மாது சிரமப்பட்டதால் அவரை உட்கார வைத்த நிலையில் தாம் பிடித்துக் கொண்டிருந்ததாக 45 வயதான எஸ் குமார் என்ற அந்த சாட்சி கூறினார். அவர் அந்த மாதுவுக்கு சிகிச்சை அளித்தார்.
அடையாளம் தெரியாத அந்த மாது கட்டிடத்திற்கு வெளியில் விழுந்து விட்டதாக அவர் சொன்னார். பின்னர் அந்த மாது அந்த வங்கியின் ஏடிஎம் எந்திரம் வைக்கப்பட்டிருந்த அறைக்குள் கொண்டு செல்லப்பட்டார்.
ஏப்ரல் 28ம் தேதி டாத்தாரான் மெர்தேக்காவைச் சுற்றியிருந்த சாலைகளில் கூடிய மக்களைக் கலைப்பதற்கு வீசப்பட்ட கண்ணீர்ப்புகையிலிருந்து தப்பிப்பதற்காக அந்த அறையில் ஏற்கனவே மக்கள் கூடியிருந்ததாகவும் குமார் சொன்னார்.