சிலாங்கூரில் உள்ள ஏழு அணைக்கட்டுகளிலும் நீர் நிரம்பி நிற்கிறது என்று கூறிய சிலாங்கூர் ஆட்சிக்குழு உறுப்பினர் ரோனி லியு, வேண்டுமென்றே நீர் நெருக்கடி என்ற ஒன்றை உருவாக்க வேண்டாம் என்று ஷியாரிகாட் பெக்காலான் ஆயர் சிலாங்கூரை(சபாஷ்) எச்சரித்தார்.
மாநில ஊராட்சி, ஆராய்ச்சி,மேம்பாட்டுக்குழுத் தலைவரான லியு, தாமும் பல கிராமத் தலைவர்களும் ஊராட்சி மன்ற கவுன்சிலர்களும் இன்று காலை அணைக்கட்டுகளுக்குச் சென்றதாகவும் அவற்றில் நீர் நிரம்பி இருந்ததைக் கண்டதாகவும் கூறினார்.
தண்ணீர் பற்றாக்குறை இல்லாத நிலையில் நீர்ப் பங்கீடு பற்றி சபாஷ் குறிப்பிட்டது ஏன் என்று அவர் வினவினார்.
“எல்லா அணைக்கட்டுகளும் ஆறுகளும் நிரம்பி நிற்கும்போது அவர்களின் கதையை நாங்கள் நம்பத் தயாராக இல்லை.
“எதற்காக நீர்ப் பங்கீடு?தண்ணீரைச் செம்மையாக சுத்திகரிப்பது எப்படி என்பது தனக்குத் தெரியாது என்பதை அது ஒப்புக்கொள்கிறதா? சுத்திகரிக்கபடாத நீர் நிறைய உண்டு”, என்றாரவர்.
நீரைச் சுத்திகரிக்கும் தகுதி சபாஷுக்கு இல்லை என்றால், நீர் விநியோகத்தை மேற்கொள்ள நினைக்கும் மந்திரி புசாரின் திட்டத்தை அது ஆதரிக்க வேண்டும் என்றாரவர்.