நீதிதுறையில் அரசியல் குறுக்கீடு: வடகிழக்கில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்!

நீதிமன்ற நடவடிக்கையில் அரசியல் தலையீடு, அச்சுறுத்தலைக் கண்டித்து இலங்கையின் வடக்கில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

வழக்கறிஞர்கள் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டிருந்ததனால், பல நீதிமன்றங்களில் வழக்கு விசாரணைகள் பாதிக்கப்பட்டிருந்தன.

மன்னார், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, சாவகச்சேரி பருத்தித்துறை மல்லாகம் ஊர்காவற்றுறை ஆகிய நீதிமன்றங்களில் வழக்கறிஞர்கள் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

மன்னார் கோந்தைப்பிட்டி மீன்பிடி துறையில் பல ஆண்டுகளாக தொழில் செய்து வந்த மன்னார் விடத்தல்தீவில் இருந்து இடம்பெயர்ந்து மன்னார் ஜோசப்வாஸ் நகரில் குடியிருக்கின்ற தமிழ் மீனவர்களை அங்கிருந்து அகற்றி, கோந்தைப்பிட்டி மீன்பிடிதுறையை எந்தவிதமான தாமதமுமின்றி உடனடியாகத் தங்களிடம் கையளிக்க வேண்டும் என்று அங்குள்ள முஸ்லிம் மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

உப்புக்குளம் முஸ்லிம் மீனவர்கள் ஒருபக்கத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த வேளை, இந்த விடயம் தொடர்பாக புதனன்று காலை விசாரணை நடத்திய மன்னார் நீதிமன்றம், மன்னார் அரசாங்க செயலாளர் மற்றும் பிரதேச செயலாளர் ஆகியோரை நீதிமன்றத்திற்கு அழைத்து 3 வார கால அவகாசம் கொடுத்து, ஜோசப்வாஸ் தமிழ் மீனவர்கள் தொழில் செய்வதற்குரிய மாற்றிடம் ஒன்றை வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.

எனினும் நீதிமன்றத்தின் இந்த உத்தரவையும் ஏற்க மறுத்த உப்புக்குளம் முஸ்லிம் மீனவர்கள் உடனடியாகக் கோந்தைப்பிட்டி துறை தம்மிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் எனக்கோரி செய்த ஆர்ப்பாட்டம் கலவரமாக மாறியது. கல்வீச்சுக்களும் இடம்பெற்றன.

இந்தக் கலவரத்தின்போது நீதிமன்ற வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டு இன்னும் திறக்கப்படாதுள்ள மேல் நீதிமன்றக் கட்டிடத்தின் ஜன்னல்கள் கல்லெறியின் காரணமாக சேதமடைந்தன.

இந்தச் சம்பவத்தைத் தாங்கள் வன்மையாகக் கண்டிப்பதாகவும் வவுனியா வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் அன்ரன் புனிதநாயகம் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

மன்னார் மாவட்ட நீதவானுக்கு எதிராக நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம் மற்றும் மன்னார் நீதிமன்றக் கட்டிடத்தின் மீது நடத்தப்பட்ட வன்முறைத் தாக்குதல் என்பன வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டிய சம்பவங்களாகும் என்று வழக்கறிஞர் அன்ரன் புனிதநாயகம் தெரிவித்துள்ளார்.

இதனிடையே மன்னார் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு குறித்து இலங்கை ஆளும் கட்சி அமைச்சர் ரிஷாத் பதியுதீன் நீதிபதியை தொடர்பு கொண்டு அந்தத் தீர்ப்பு பிழையானது என்று கூறியதாகவும், அதை அடுத்து நீதிபதி இதை மேலதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டுவந்ததாகவும் செய்திகள் வெளியானதை அடுத்து வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆனால் எந்தவொரு கட்டத்திலும் தான் நீதிபதியை தொடர்பு கொண்டு பேசவும் இல்லை, அச்சுறுத்தல் விடுக்கவும் இல்லை என்று அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.

மன்னாரில் தற்போது நடைபெற்று வரும் விடயங்களை பார்க்கும் போது, அங்கு இனவாதம் மதவாதம் தலைவிரித்து ஆடுகிறது என்பது தெரிவதாக அவர் கூறுகிறார்.

இவ்வகையான செயல்பாடுகள் முஸ்லிம் மக்களை மன்னாரிலிருந்து துரத்துவதற்கு செய்யப்படும் ஒரு சதியாகவே தான் பார்ப்பதாகவும் அவர் மேலும் கூறுகிறார்.

TAGS: