“பக்காத்தானுக்குப் பயங்கரவாதத் தொடர்பு என்று தேடிப் பிடித்து ஒரு குற்றச்சாட்டைச் சுமத்துகிறது பிஎன்”

பிஎன் அரசு, வேறு ஒன்றும் கிடைக்காத நிலையில் பக்காத்தானில் கம்முனிஸ்டுகளும்  பயங்கரவாதிகளும் ஊடுருவி இருப்பதாக தேடிப் பிடித்து ஒரு குற்றச்சாட்டைச் சுமத்துகிறது  என டிஏபி சாடியுள்ளது.

டிஏபி நாடாளுமன்றத் தலைவர் லிம் கிட் சியாங் இன்று விடுத்த அறிக்கை ஒன்றில்,பக்காத்தான் ரக்யாட்டில் ஜும்மா இஸ்லாமியா(ஜேஐ) பயங்கரவாதிகளும் கம்முனிஸ்டுகளும் ஊடுருவியிருப்பதாக போலீஸ் சிறப்புப் பிரிவு பகிரங்கமாக அறிவிக்க இடமளித்தது ஏன் என்று பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கும் உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின் உசேனும் விளக்கமளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறார்.

“இப்படி ஒரு புரளியைப் பகிரங்கமாகக் கிளப்பிவிட சிறப்புப் பிரிவுக்கு அனுமதி அளித்தது ஏன் என்பதை நஜிப்பும் ஹிஷாமுடினும் விளக்க வேண்டும்”.

நேற்று பெர்னாமா செய்தியில் வெளியிடப்பட்டிருந்த அக்குற்றச்சாட்டை இவ்வாண்டின் மிக மோசமான அரசியல் ‘ஜோக்’காக நினைத்துச் சிரித்துவிட்டு ஒதுக்கித்தள்ளி இருக்கலாம்.ஆனால், அரசாங்கத்தின் உச்ச நிலையில் கொள்கைகளையும் பாதுகாப்பையும் தீர்மானிப்போரிடம் இப்படிப்பட்ட கிறுக்குத்தனமான யோசனைகள் தோன்றுவதை நினைத்தால்தான் கவலையாக இருக்கிறது என்றாரவர்.

அச்செய்தி அறிக்கை, முன்னாள் ஜும்மா இஸ்லாமியா(ஜேஐ) பயங்கரவாதிகளும் கம்முனிஸ்டுகளும் மாற்றரசுக் கட்சிகளில் ஊடுருவி, எதிர்வரும் தேர்தலில் வேட்பாளர்களாகக் களமிறங்க முயன்று வருவதாக போலீஸ் சிறப்புப் பிரிவின் புலன் விசாரணையில் தெரிய வந்துள்ளதாகக் கூறிற்று.

ஏப்ரல் 28 பெர்சே 3.0பேரணியின்போதும் போலீஸ் இதேபோன்ற குற்றச்சாட்டைத்தான் கூறியது.ஆனால்,அதற்கு ஆதாரம் எதுவும் காண்பிக்கப்படவில்லை.

 

TAGS: