தண்ணீர் தட்டுப்பாடா, சபாஷ் ஆதாரங்கள் காண்பிக்க வேண்டும்

சிலாங்கூரிலும் கோலாலம்பூரிலும் மிகப் பெரிய அளவில் தண்ணீர் தட்டுப்பாட்டு நேரலாம் என்று கூறும் சபாஷ் அவ்வாறு கூறுவதற்கு அடிப்படையாகவுள்ள தகவல்களை வெளியிட வேண்டும் என்கிறார் கிள்ளான் எம்பி சார்ல்ஸ் சந்தியாகு.

அந்த வகையில் 2012 ஜனவரியிலிருந்து 2012 ஜூலை 15வரை அணைக்கட்டுகளிலிருந்தும் ஆறுகளிலிருந்தும் சுத்திகரிப்பு ஆலைகளுக்கு அனுப்பப்பட்ட சுத்திகரிக்கப்படாத நீரின் மொத்த அளவை அவர் தெரிந்துகொள்ள விரும்புகிறார்.

சிலாங்கூரில் உள்ள 33 நீர் சுத்திகரிப்பு ஆலைகளுக்கு எவ்வளவு நீர் அனுப்பப்பட்டது, அதே காலக்கட்டத்தில் பயனீட்டாளர்களுக்கு விநியோகம் செய்யப்பட்ட நீரின் அளவு என்ன என்பதை சபாஷ் தெரிவிக்க வேண்டும்.

“உண்மையிலேயே தண்ணீருக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளதா என்பதை சபாஷ் பொதுமக்களுக்கு நிரூபிக்க வேண்டும்”, என்று செய்தியாளர் கூட்டமொன்றில் சந்தியாகு(வலம்) கூறினார்.

அது வழங்கும் தகவல்களை வைத்து சபாஷ் கூறுவதுபோல் தண்ணீருக்குத் தட்டுப்பாடு வருமா என்பதை என்ஜிஓ-கள் உறுதிப்படுத்தும் என்று தண்ணீர் தனியார்-மயத் திட்டத்தை எதிக்கும் கூட்டணியின் ஒருங்கிணப்பாளரான சந்தியாகு கூறினார்.

அணைக்கட்டுகளில் நீர் நிரம்பி நிற்பதைக் காண்பிக்கும் படத்தை வைத்தும் ஒரு முடிவுக்கு வர முடியாது என்றாரவர்.

“அணைக்கட்டில் நீர் நிறைந்திருப்பதைக் காட்டும் ஒரு படத்திலிருந்து என்ன தெரிந்துகொள்ள முடியும்……ஒரு வேளை முந்திய நாள் மழை பெய்திருக்கலாம்”, என்றாரவர்.

சிலாங்கூரில் தண்ணீர் தட்டுப்பாடு வரலாம் என்பதால் சபாஷ் தண்ணீர் பங்கீட்டை அமலாக்க எண்ணுவதாக ஜூலை 14-இல் ஒரு செய்தி வெளியாகி இருந்தது.

இரண்டு நாள் கழித்து இதற்கு எதிர்வினையாற்றிய சிலாங்கூர் பக்காத்தான் அரசு, சபாஷின் நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ளப் போவதாகக் கூறியது.

நேற்று, எரிபொருள்,பசுமை எரிபொருள்,தண்ணீர் விவகார அமைச்சர் பீட்டர் சின் பா கூய், சிலாங்கூரின் தண்ணீர் நிலவரத்தைக் கவனிக்க அமைச்சரவைக் குழு ஒன்று அமைக்கப்படும் என்றார்.

 

TAGS: