பாஸ் இஸ்லாமிய சித்தாந்தத்தை கைவிட தயாரா?, ஹிண்ட்ராப் சவால்

மலேசியாகினி மின்னூடக செய்தி அகப்பக்கத்தில் பாஸ் கட்சியின் கோத்தா ராஜா நாடாளுமன்ற உறுப்பினரான டாக்டர் சித்தி மரியா, ஹிண்ட்ராப் இயக்கத்தை இனவாரி அமைப்பு என பொருள் படும் வகையில் கருத்து வெளியிட்டிருப்பதை நாங்கள் வன்மையாக எதிர்த்து கண்டிக்கிறோம்.

இந்திய வாக்காளர்களை சாமானியர்களாக கருதும் போக்கை பாஸ் மற்றும் பக்காத்தான் கட்சிகளின் இளக்காரமான செயலை உடனே நிறுத்திக் கொள்ளும்படியும் எச்சரிக்கிறோம்.

மலேசிய இந்தியர்களுக்கு  ஜனநாயக உரிமைகளை உணர்த்தி அவர்கள் நாடாளுமன்றத்தில் முறையான வகையில் பிரதிநிதிக்கப் படவேண்டும்  என்ற விழிப்புணர்ச்சியை ஏற்ப்படுத்திய இயக்கம் ஹிண்ட்ராப் ஆகும். ஹிண்ட்ராப் போராடுவது இந்தியர்களின் கண்ணியமான சமத்துவத்திற்கு என்பதை  பக்காத்தான் தலைவர்கள் உணரவேண்டும்.

ஹிண்ட்ராப் இன ரீதியிலான கொள்கைகளுக்கு போராடுகிறது என்ற டாக்டர் சித்தியின் கருத்து அவரின் முதிர்ச்சியின்மையையும் அறியாமையையுமே பிரதிபலிக்கிறது. ஆட்சி முறைக்கு உட்படுத்தப்பட்ட மலேசியாவின் இன ரீதியான கொள்கைகளுக்கு எதிராக உள்நாட்டிலும் அனைத்துலக ரீதியுலும் துணிவுடன் குரல் கொடுத்த ஒரே இயக்கம் ஹிண்ட்ராப்தான் என்பதை எங்களின் அகப்பக்கத்தை வலம் வந்திருந்தால் இவர் இப்படி பேசியிருக்க மாட்டார்.

டாக்டர் சித்தியும் அவரின் பாஸ் கட்சியும் மலேசிய சட்ட சாசனத்தில் குடிமக்களை இனரீதியாக வகைப் படுத்தி பிரித்தாளுவதற்கு வகை செய்யும் சட்டப் பிரிவை அகற்றக்கோரி பகிரங்கமாக போராடும்படி ஹிண்ட்ராப் சார்பில் சவால் விடுகிறோம்! மலேசியாவை இஸ்லாமிய நாடாக மாற்றும்  பாஸ் கட்சியின் கொள்கைகளை  கைவிடுமாறும் நாங்கள் மேலுமொரு சவாலையும் இவர்களுக்கு விடுக்கிறோம்.

சவால்களை  ஏற்கத்  தயாரா? பல இன சமூகங்கள் வாழும் நாட்டை, பல்வேறு கலாச்சாரங்கள் போற்றப்படும் நாட்டை   இஸ்லாமிய நாடாக மாற்றும் எண்ணம் கொண்டுள்ள பாஸ் கட்சியின் சித்தாந்தம் எப்படி மலேசியர்களுக்கு பொருந்தும் என்று எங்களுக்கும் கேட்க தெரியும். இனரீதியான அரசியல் என்றால் என்ன என்று முதலில் முழுமையாக தெரிந்து கொண்டு  பின்னர் ஹிண்ட்ராப் அமைப்புக்கு எதிராக கருத்து கூறி இருக்கவேண்டும் இவர்.

ஓர் இனம் அதன் உரிமைக்கு குரல் கொடுக்க வகை செய்யும்  அனைத்துலக உடன்படிக்கைகளை சித்தி மரியாவும் அவரை போன்றவர்களும்  கற்றரிந்திருந்தால் தங்களை “துவான்களாகவும்”, “தவுக்கேகளாகவும்” எண்ணி  “நம்பிக்கை” கொள்ள வைத்து  மலேசிய இந்தியர்களை நிரந்தரமாக   தங்களின்  ஆதிக்கத்திற்கு உட்பட்டவர்களாக கருதமாட்டார்கள்.

டாக்டர் சித்தியையும் ஏனைய அவர் கட்சிக்காரர்களையும் நாடாளுமன்றத்திக்கு அனுப்புவதில் முக்கிய பங்காற்றிய ஹிண்ட்ராப் அமைப்பை இன்று இப்படி  நாக்கு கூசாமல் இனரீதியான அமைப்பு என்று சொல்லும் இவரின் போக்கும்,  உண்ட வீட்டிற்கு இரண்டகம் செய்து, உப்பிட்டவனை மறந்தவனுக்கும் ஒன்றும் அதிகமான வித்தியாசத்தை எங்களால் உணர முடியவில்லை.

இன்றையச் சூழலில் கூட இந்தியர்களின் ஆதரவு  இல்லாமல் சிலாங்கூரில் நான்கு நாடாளுமன்ற தொகுதிகளையும் ஐந்து சட்டமன்ற தொகுதிகளையும் பாஸ் கட்சி ஒருபோதும் வெல்ல முடியாது என்பதை அவர்கள் உணரவேண்டும். பாஸ் என்ற ஒரு கட்சிக்கே இந்த நிலை என்றால் பக்கத்தானில் உள்ள அனைத்து கட்சிகளும் எவ்வளவு இடங்களை இந்தியர்களின் ஆதரவு இல்லாமல் இழக்க நேரிடும் என்பதை இவர்கள் புரிந்து கொண்டு  பொறுப்பற்ற இது போன்ற கருத்துகளை இனியும் வெளிப்படுத்தாமல்  பொறுப்புடன் செயல் படவேண்டும்.

மலாய் முஸ்லிம்களின் உரிமைக்கு மாத்திரமே போராடும் ஒரு கட்சி என்றும்,  மலாய்க்காரர் அல்லாதாருக்கு அதனால் பயனில்லை என்றும் ஹிண்ட்ராப் பரப்புரைகளைத் துவங்கினால் அதன் பாதிப்பு பாஸ் கட்சிக்கு மாத்திரமல்ல  டாக்டர் சித்திக்கும்தான். கோத்த ராஜா தொகுதியை தற்காத்துக் கொள்ள எவ்விதத்திலும் அவருக்கு இது உதவப்போவதுமில்லை.

அனைத்து இனத்தவருக்கும் பாஸ் போராடும் என்ற டாக்டர் சித்தியின் கூற்றை ஒரு பேச்சுக்கு எடுத்துக் கொண்டால் கூட, இந்தியர்களின் அடிப்படை பிரச்சனைகளில் ஏதாவது ஒன்றுக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் இவர் இதுவரையில் முயன்று இருப்பாரா? மற்ற இனத்தவரின் சட்ட உரிமை பிரச்சனைகளுக்கு பாஸ் இது வரை எத்தனை முறை குரல் கொடுத்திருக்கிறது?  தம் கணவருடனான சமய சர்ச்சையைக் காரணம் காட்டி இந்திரா காந்தி என்ற தாயின் மார்பில் பால் குடித்து கொண்டிருந்த குழந்தையை அபகரித்து, கிளந்தானில் ஒரு இமாமின் வீட்டில் வைத்திருந்தபோது, அந்த அப்பாவி இந்திய தாயின் கண்ணீருக்கு உரிமை போராட வந்தாரா இந்த டாக்டர் மரியா? அப்படி செய்திருந்தால் அனைத்து சமயத்தாருக்கும், இனத்தாருக்கும் போராடினார் என்று சொல்லலாம். இல்லையே!

பாஸ் தலைவர்களோ, மற்ற பக்காத்தான் தலைவர்களோ ஹிண்ட்ராப் அமைப்பை ஏதோ வெறும் அரசியல் பதவி ஆசைகளுக்கு விலை போகும் முதுகெலும்பற்ற இயக்கம் என்று நினைத்து கொண்டிருக்கிறார்கள் என்றால், அந்த எண்ணத்தை மாற்றிக் கொள்ளுங்கள்.
நாங்கள் நீதிக்கும், நியாயத்திற்கும், தர்மத்திற்கும்  மட்டுமே தலைவணங்கி போராடுகிறோம். டாக்டர் சித்தி மரியா தமது தெளிவற்ற கருத்தை  திரும்பப் பெற்று மன்னிப்பு கோருவார் என்று எதிர்பார்ப்போம்.

-ரமேஷ், செயலாளர், ஹிண்ட்ராப் மக்கள் சக்தி, ஜூலை 20, 2012.