செர்டாங் எம்பி குற்றப் புள்ளிவிவரங்களை அரசியலாக்கக் கூடாது என்று வலியுறுத்திய சிலாங்கூர் போலீஸ் தலைவர் துன் ஹிசான் துன் ஹம்சா,அவர் குற்றச்செயல்களைக் குறைக்க போலீசுடன் ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
“புள்ளிவிவரங்களைப் பற்றி ஏன் கவலைப்பட்டுக் கொண்டிருக்க வேண்டும்.வாருங்கள், குற்றச்செயல்களைக் குறைக்க சேர்ந்து பாடுபடுவோம்”.
இன்று காலை ஷா ஆலம் போலீஸ் தலைமையகத்தில் செய்தியாளர் கூட்டமொன்றில் அவர் இவ்வாறு கூறினார்.
புள்ளியியல்கூட தவறான எண்ணத்தை உருவாக்கலாம்.
மகளிர் அமைச்சுக்குக்கூட துல்லியமான குற்றப் புள்ளிவிவரங்கள் கிடைப்பதில்லை என்று செர்டாங் எம்பி தியோ கூறியது பற்றி செய்தியாளர்கள் வினவியபோது சிலாங்கூர் போலீஸ் தலைவர் இவ்வாறு கூறினார்.
குடும்ப வன்செயல்கள் பற்றி நாடாளுமன்றத்தில் எழுத்துப்பூர்வமாகக் கேட்கப்பட்ட கேள்விக்கு இரண்டு வகையான பதில்கள் கிடைத்ததாக தியோ கூறியிருந்தார்.
அது பற்றித் தமக்குத் தெரியாது என்று கூறிய துன் ஹிசான்(இடம்)அந்தப் புள்ளிவிவரத்தை வழங்கிய போலீசாரைத்தான் தியோ கேட்க வேண்டும் என்றார்.
அந்தச் செய்தியாளர் கூட்டத்தில், நேற்று நடத்திய அதிரடி நடவடிக்கையில் போலீசார் ஏழு சந்தேகப் பேர்வழிகளைக் கைது செய்து ரிம2மில்லியன் பெறுமதியுள்ள நகைகளைக் கைப்பற்றிய தகவலையும் துன் ஹிசான் வெளியிட்டார்.
அவை ஜூலை 18-இல், கோலாலம்பூர் பன்னாட்டு விமான நிலையத்தில்(கேஎல்ஐஏ) ஒரு ஹாங்காங் வணிகரிடம் கொள்ளையிடப்பட்டவையாகும்.
“கேஎல்ஐஏ-இல் கிட்டதட்ட 3,000கண்காணிப்பு கேமிராக்கள் வைக்கப்பட்டுள்ளன.பல குற்றவாளிகள் இதை அறிய மாட்டார்கள் என்பதால் அவர்களை எச்சரிக்கிறேன். கேஎல்ஐஏ-இல் பாதுகாப்புமுறைகள் இப்போது வலுப்படுத்தப்பட்டுள்ளன”, என்றாரவர்.
செய்தியாளர்களுக்குப் போட்டுக் காண்பிக்கப்பட்ட ஒரு காணொளி, சந்தேகப் பேர்வழி ஒருவன் நகை வியாபாரியிடம் பேச்சு கொடுப்பதையும் அவன் கூட்டாளி நகைகள் அடங்கிய பையை எடுத்துக்கொண்டு நழுவிச்செல்வதையும் காட்டியது.
நகை வியாபாரியின் கவனம் திசைதிருப்பப்பட்டதால் அவர் நகை திருடுபோனதை உணர 18 நிமிடங்கள் ஆயிற்று என்று துன் ஹிசான் குறிப்பிட்டார்.