ராசபக்சவின் இணைப்பாளர் மீது அம்பாறையில் கிளைமோர் தாக்குதல்!

மகிந்த ராஜபக்சேவின் அம்பாறை மாவட்ட ஜனாதிபதி இணைப்பாளரும் கருணாவின் சகாவுமான இனியபாரதி என்பவரை இலக்கு வைத்து கிளைமோர் குண்டுத் தாக்குதல் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனினும் இத்தாக்குதலில் இருந்து அவர் உயிர் தப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

2004-ஆம் விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து பிரிந்து சென்று சிங்கள அரசாங்கத்துடன் இணைந்துகொண்ட கருணா என்ற வி. முரளிதரனுடன் இவர் கடந்த காலங்களில் செயல்பட்டு வந்தார் என தெரிவிக்கப்படுகிறது.

சிறார்களை கடத்தி ஒட்டுக்குழுக்களில் சேர்த்தல், கட்டப்பஞ்சாயத்து, கப்பம் கோரல், கொலை, கொள்ளை போன்ற குற்றச்சாட்டுகள் இவர் மீது மனித உரிமை அமைப்புகளினால் அதிகமாக சுமத்தப்பட்டுள்ளன.

சிங்களப் பெண் ஒருவர் திருமணம் முடித்து சொத்துகளை அபகரித்து கொண்டு பிரிந்து போயிருந்த நிலையில் அண்மையில் அவர் பள்ளிக்கூட மாணவி ஒருவரை பலவந்தமாக கடத்திக் கொண்டுபோய் கட்டாய திருமணம் செய்துள்ள நிலையில் தற்போது அவரை இலக்குவைத்து கிளைமோர் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.

இனியபாரதி பயணம் செய்த வாகனம் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதல் இலக்கு தவறியதால் அவர் உயிர்தப்பியுள்ளதாகவும் அவரது வாகனம் பலத்த சேதங்களுக்குள்ளாகியுள்ளதாகவும் தெரியவருகிறது.

உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த சிறீ லங்கா காவல்துறையினரும் இராணுவத்தினரும் அந்த சுற்றுவட்டாரத்தில் தேடுதல் நடத்திய போதே தாக்குதல் சம்பவம் இடம்பெற்றதுக்கு அருகாமையில் வெடிக்கவைக்க தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த மற்றுமொரு கிளைமோர் குண்டு ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது

இச்சம்பவம் அரசாங்கத்தின் உள்வேலையா அல்லது விடுதலைப் புலிகளின் ஊடுருவலா என்பது இன்னும் தெளிவாகவில்லை.

TAGS: