நீர் விநியோகக் குத்தகை நிறுவனமான ஷரிகாட் பெக்காலான் ஆயர் சிலாங்கூரை (ஸபாஷ்) சிலாங்கூர் அரசு எடுத்துக்கொள்ள அனுமதிப்பதில்லை என்று கூட்டரசு அரசாங்கம் இப்போதைக்கு முடிவு செய்துள்ளது.
சிலாங்கூர் ஸபாஷை எடுத்துக்கொள்ள அனுமதிக்குமுன் பல“நடைமுறை” விவகாரங்களைக் கவனிக்க வேண்டியிருப்பதாக சிலாங்கூர் குடிநீர் பிரச்னை மீதான சிறப்பு அமைச்சரவைக் குழு அதன் கூட்டத்தில் ஒப்புக்கொண்டது.
எனினும், சட்டத்துறைத் தலைவருடன் கலந்துபேசிய பின்னரே இறுதி முடிவு செய்யப்படும் என்று துணைப் பிரதமர் முகைதின் யாசின் கூறினார்.
புத்ரா ஜெயாவில் மூன்று-மணி நேரக் கூட்டத்துக்குத் தலைமையேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முகைதின்“இதன் தொடர்பில் இன்று பிற்பகல் ஒரு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யுமாறு அவருக்குப் பணிக்கப்பட்டுள்ளது”, என்றார்.
சிலாங்கூர் அரசு ஸபாஷை எடுத்துக்கொள்வதற்குத் தடையாகவுள்ள விவகாரங்களையும் அவர் விளக்கினார்.அவற்றுள்,ஸபாஷ் நிறுவனம் தண்ணீர் கட்டணத்தை உயர்த்த அனுமதியளிக்க மறுத்ததுடன் அதற்கு இழப்பீடு கொடுக்கத் தவறியதும் ஒன்று.
“அதன் தொடர்பில் ஸபாஷ் சிலாங்கூருக்கு எதிராக தொடுத்த வழக்கு இப்போது நீதிமன்றத்தில் உள்ளது”, என்றார்.
2009-இல் தண்ணீர் கட்டணத்தை உயர்த்த ஸபாஷ் அனுமதி கேட்டபோது விரயமாகும் நீரைக் குறைத்தால்தான் அனுமதி என்று சிலாங்கூர் அரசு கூறிவிட்டது.
இன்றைய கூட்டத்துக்கு சிலாங்கூர் அரசு அழைக்கப்படவில்லை.அது ஏன் என்று வினவியதற்கு இது கூட்டரசு நிலையிலான கூட்டம் என்று முகைதின் தெரிவித்தார்.