எதிர்வரும் வெள்ளிக்கிழமை லண்டனில் கோடைகால ஒலிக்பிக் போட்டிகள் தொடங்கவுள்ள நிலையில், அந்தப் போட்டியின் சுடர், பிரிட்டனின் பல பகுதிகளில் பயணித்த பிறகு தற்போது லண்டனின் பல பகுதிகளில் அது வலம் வருகிறது.
ஞாயிற்றுக்கிழமை(22.7.12), இந்த ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ள கிழக்கு லண்டன் பகுதியின் பல இடங்களுக்கு இந்த ஒலிம்பிக் சுடர் ஏந்தி வரப்பட்டது.
இதையொட்டி அந்தச் சுடர் வலம் வந்த பகுதிகள் எங்கும் மக்கள் பெருமளவில் குழுமி நின்று ஆரவாரத்துடன் அந்தச் சுடரை வரவேற்றனர். பல இடங்களில் அந்தச் சுடர் பயணித்த வீதிகளை ஒட்டியப் பகுதிகளில் இசை மற்றும் நடன நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.
இந்த ஒலிம்பிக் போட்டிகளுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தற்போது முடுக்கிவிடப்பட்டுள்ளன. பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய நியமிக்கப்பட்டிருந்த நிறுவனம் கடைசி நேரத்தின் முழுமையான ஆட்பலத்தை வழங்க இயலாது என்று அறிவித்துள்ள நிலையில், பிரிட்டனின் பாதுகாப்பு படையினர் ஒலிம்பிக் போட்டிகளுக்கான பாதுகாப்பு பணிகளுக்காக உள்வாங்கப்பட்டுள்ளனர்.
சுமார் ஐயாரம் பாதுகாப்பு படை வீரர்கள் ஒலிம்பிக் பாதுகாப்புகாக ஈடுபடுத்தப்படுகின்றனர். எனினும் லண்டன் நகரின் பல பகுதிகளில் இந்த ஒலிம்பிக் சுடர் வலம் வந்த போது, பாதுகாப்பு கெடுபிடிகள் பெருமளவில் காணப்படவில்லை.
அனைத்து தரப்பு மக்களும் சாலையோரங்களில் நின்று, அந்தச் சுடரை ஏந்தி வந்தவரை அருகில் இருந்து பார்க்கும் வாய்ப்பை பெற்றனர். புகைக் படங்களும், ஒளிப்படங்களும் எடுக்க எந்தத் தடையும் இல்லாத சூழலே நிலவியது.
திங்கட்கிழமை தெற்கு லண்டனின் பல பகுதிகளில் பயணம் செய்யும் இந்த ஒலிம்பிக் சுடர் பின்னர் மேற்கு மற்றும் வடக்கு லண்டன் பகுதிக்கு சென்ற பின்னர் இறுதியாக போட்டிகள் சம்பிரதாய ரீதியில் 27-ஆம் தொடங்கும் நாளன்று மீண்டும் கிழக்கு லண்டன் பகுதிக்கு வந்து ஸ்ட்ராட்ஃபோர்ட் பகுதியில் இருக்கும் முக்கிய விளையாட்டு அரங்குக்கு கொண்டு வரப்படும்.
எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கும் அன்று ஏற்றி வைக்கப்பட்டு போட்டிகள் முடிவடையும் வரை தொடர்ந்து எரியும் அந்த ஒலிம்பிக் ஜோதியை அரங்கில் யார் ஏற்றி வைப்பார்கள் என்பது இன்னமும் இரகசியமாகவே வைக்கப்பட்டுள்ளது.