சுஹாகாம்:‘கோ’ என்றழைக்கப்பட்ட போலீஸ்காரரை அடையாளம் காட்டுக

மனித உரிமை ஆணையம்(சுஹாகாம்) அதன் பொது விசாரணையில் இரண்டு தடவை பெயர் குறிப்பிட்டப்பட்ட ஒரு போலீஸ்காரரை அடையாளம் காட்டுமாறு போலீஸ் படையைக் கேட்டுக்கொண்டிருக்கிறது.

“கோ” என்று மட்டுமே குறிப்பிடப்பட்ட அந்தச் சீன அதிகாரி யார் என்பதை “அடையாளம் கூறுமாறு” போலீஸ் படைக்காக பொதுவிசாரணையைக் கவனித்து வரும் ஏசிபி ஜமாலுடின் அப்துல் ரஹ்மானையும் ஏஎஸ்பி  எஸ்.சண்முகத்தையும் ஆணையத்தின் உதவித் தலைவர் காஃப் லேக் டீ கேட்டுக்கொண்டார்.

பொது விசாரணையில் சாட்சியம் அளித்த லியோங் சியு மென் என்பார்,  தாம் அரச சிலாங்கூர் கிளப்புக்கு “இழுத்துச் செல்லப்பட்டபோது அவ்வதிகாரிதான் தமக்குக் காவல் இருந்ததாகத் தெரிவித்தார்.

“என்னை இழுத்துச் செல்கையில் அடித்தார்கள், உதைத்தார்கள், குத்தினார்கள்”, என்று இன்றைய பொது விசாரணையில் 11வது சாட்சியாவாரான லியோங் கூறினார்.

“எதற்காக இப்படிச் செய்கிறார்கள்?”, என்று லியோங் “கோவிடம்” மெண்டரின் மொழியில் வினவினார்.ஆனால்,அந்த போலீஸ் அதிகாரி பதில் பேசவில்லை.

சுஹாகாமின் விசாரணையில் அந்த அதிகாரியின் பெயர் இரண்டு தடவை குறிப்பிடப்பட்டிருக்கிறது என்று காஃப் கூறினார்.

லியோங், ஏப்ரல் 28-இல் பெர்சேயின் குந்தியிருப்புப் போராட்டத்தில் கலந்துகொள்ளச் சென்றதாகக் கூறினார்.

டாட்டாரான் மெர்டேகாவுக்குள் செல்ல முடியாமல் தடுப்புகள் போடப்பட்டிருந்த இடத்தில் அவர் இருந்திருக்கிறார். அங்கு கூட்டம் நிறைய இருந்தது.அதனால் பதற்ற நிலையும் மிகுந்திருந்தது.

“பகல் 3மணிக்கு போலீஸ் கண்ணீர் புகைக்குண்டுகளை வெடித்தது.நீர் பீரங்கிகளும் நீரைப் பீய்ச்சி அடித்தன”, என்று லியோங் கூறினார்.

அவர் ஜாலான் பார்லிமென் வழியாக,  கேஎல் செண்ட்ரலுக்குச் செல்ல முயன்றார்.ஆனால், முடியவில்லை.வழியில் ஒரு டஜன் போலீஸ்காரர்களும் மாநகராட்சி மன்ற அமலாக்க அதிகாரிகளும் அவரைப் பிடித்துக்கொண்டனர்.

“கைது செய்யப்பட்டேன். என் கைகள் கட்டப்பட்டன.அதன்பின்  அடிக்கத் தொடங்கினார்கள் ‘சீனா பாபி(சீனப் பன்றி)’ என்று ஏசினார்கள்.

“நான் என் தங்கச் சங்கிலியைக் கழட்ட முயன்றேன்.ஆனால், அது பறிக்கப்பட்டது.ஒரு போலீஸ்காரர் அதைத் தம் பைக்குள் போட்டுக்கொள்வதைப் பார்த்தேன்”, என்றார் லியோங்.

லியோங்கை அரச சிலாங்கூர் கிளப்பில் மூன்று மணி நேரம் வைத்திருந்துவிட்டு இரவு மணி 7.30க்கு ஜாலான் செமாராக்கில் உள்ள போலீஸ் பயிற்சி மைய(புலாபோல்)த்துக்குக் கொண்டு சென்றனர்.

பின்னிரவு 2.30 வாக்கில் அவர் விடுவிக்கப்பட்டார்.விடுவிக்கப்பட்டதும் லியோங் கோலாலம்பூர் மருத்துவமனைக்குச் சென்று காயங்களுக்கு சிகிச்சை பெற்றார்.