அவசரகாலசட்டம் இல்லாதது தான் பிரச்சனை என்கிறார் கோட்டா

இலங்கையில் போர் முடிவுக்கு வந்த சூழ்நிலையில் அவசரகாலச் சட்டம் போன்ற கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டமையால் தான் குற்றவாளிகள் தடையின்றி செயற்படுவதாக பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்சே கூறியுள்ளார்.

குற்றச்செயல்கள் பற்றிய செய்திகள் வெளியிடப்படுகின்ற முறையால்தான் நாட்டில் தொடர் குற்றச்செயல்கள் அதிகரிக்கும் போக்கு காணப்படுவதாக கருத்துக்கள் வளர்ந்து வருவதாகவும் அது தவறு என்றும் கோட்டாபய கூறியுள்ளார்.

குற்றச்செயல்களும் தேசியப் பாதுகாப்பும் என்ற தொனிப்பொருளில் நேற்று திங்கட்கிழமை காலை அரசின் தகவல் திணைக்களத்தில் நடந்த கருத்தரங்கில் பேசிய பாதுகாப்புச் செயலாளர், வடக்கில் பாதுகாப்புப் படையினரால் எந்தவொரு பாலியல் வன்முறைகளும் புரியப்பட்டதாக தகவல்கள் இல்லை என்றும் கூறினார்.

இறுதிக் கட்டப் போரின்போது இலங்கை படையினர் பெண்களை பாலியல்கொடுமைகளுக்கு உள்ளாக்கி கொன்றதாக வெளிநாட்டவர்களுக்கு தவறாக தகவல்கள் பரப்பப்பட்டுள்ளதாகவும் கோட்டாபய தெரிவித்துள்ளார்.

இலங்கையில் குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்தக்கூடிய அளவுக்கு இராணுவத்துக்கு போதிய அதிகாரங்கள் இல்லாமல் இருப்பதாகவும் அதுதான் பல பிரச்சனைகளுக்கு காரணம் என்ற தொனியிலும் கோட்டாபய ராஜபக்ஷ பேசியிருக்கிறார்.

இதேவேளை இலங்கையில் குற்றச்செயல்கள் அதிகரித்துவருவதாக மனித உரிமை ஆர்வலர்கள் சுட்டிக்காட்டிவருகின்றனர்.

TAGS: