அரசு பெர்சேயைத் தீயதாகக் காண்பிக்க முயல வேண்டாம்

பெர்சே ஒரு சட்டவிரோத அமைப்பல்ல என்று நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பதால் அதைத் தீயதாக உருவகித்துக் காட்டுவதை அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று பாஸ் தலைமைச் செயலாளர் முஸ்தபா அலி வலியுறுத்தியுள்ளார்.

“சட்ட அடிப்படையில் தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.பிஎன் குற்றச்சாட்டுகளால் பெர்சே பற்றி நிலவிய தப்பெண்ணங்களையெல்லாம் மூட்டை கட்டி வைக்க வேண்டும்”, என்று பாஸ் தலைமையகத்தில் பக்காத்தான் தலைவர்களுடன் கூட்டாக நடத்தப்பட்ட செய்தியாளர் கூட்டத்தில் அவர் கூறினார்.

அதைச் சட்டவிரோத அமைப்பு என உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின் உசேன் அறிவித்ததில்  “நியாயமில்லை” என்று உயர்நீதிமன்ற நீதிபதி ரொஹானா யூசுப் தம் தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தார்.

அத்தீர்ப்பு, பெர்சேயை ஆதரிக்க பக்காத்தான் செய்த முடிவு சரியானதே என்பதைக் காண்பிக்கிறது என பாஸ் பொருளாளர் முகம்மட் ஹட்டா இஸ்மாயில் (இடம்) கூறினார்.

பிகேஆர் உதவித் தலைவர் தியான் சுவா, அது ஒன்றுகூடும் உரிமையை நிலைநிறுத்தும் “குறிப்பிடத்தக்க தீர்ப்பு” என்று பாராட்டினார்.

“எரிபொருள் விலை உயர்வை அல்லது உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டம் போன்ற நியாயமற்ற கொள்கைகளை எதிர்க்க என்ஜிஓ-கள் ஒன்று கூடுவதை இனியும் சட்டவிரோதம் என்று கூற முடியாது”, என்றாரவர்.