பேராக் மாநில மஇகா தலைவர் ஒருவர், ஒரு விலைமாதுவுடன் பாலியல் உறவுகொள்ளும் காட்சி காணொளியில் பதிவாகியுள்ளதாகக் கூறப்படுவது அபாண்டமாகக் குற்றச்சாட்டு என்று கூறிய மஇகா உதவித் தலைவர் எம்.சரவணன் அதற்குத் “துளியளவு ஆதாரமும் இல்லை” என்றார்.
இவ்விவகாரம் தொடர்பில் சரவணனைத் தொடர்புகொண்டு பேசியபோது, “எல்லாமே பொய்.தேர்தல் எந்த நேரத்திலும் வரலாம் என்ற பேச்சு இருப்பதால், தலைவர்களின் நற்பெயரைக் கெடுக்க இதுதானே பொன்னான வாய்ப்பு”,என்றார்.
“அந்நபர் கூறுவதுபோல் மாற்றரசுக் கட்சியிடம் அப்படி ஒரு வீடியோ இருந்தால்,எதற்காகக் காத்திருக்கிறார்கள்? இதற்குள் முழுமையாகவோ பகுதிபகுதியாகவோ வெளியிட்டிருப்பார்களே”, என்று கூட்டரசு பிரதேச, நகர்ப்புற நல்வாழ்வு துணை அமைச்சருமான சரவணன் வினவினார்.
செக்ஸ் வீடியோ பற்றிய செய்தி பல இணையத் தளங்களிலும் மையநீரோட்ட செய்தித்தாள்களிலும் வெளியாகி இருந்தது. அந்த வீடியோ மாற்றரசுக் கட்சியினரின் கைவசம் உள்ளதாக மஇகா இளைஞர் வட்டாரம் ஒன்று தெரிவித்ததாக அவை கூறின.
மஇகா-வுக்கெதிராக அதிருப்தி உண்டுபண்ணவும் சம்பந்தப்பட்ட தலைவரைப் பற்றித் தப்பான கருத்தை உருவாக்கவும்தான் அப்படி ஒரு குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது என்று சரவணன் நினைக்கிறார்.
வீடியோவில் இருப்பதாகக் கூறப்படும் நபரைத் தொடர்புகொள்ள மலேசியாகினி முயன்றது ஆனால் முடியவில்லை.
முதலில் கட்சிக்குத் தெரியப்படுத்தியிருக்க வேண்டும்
“இவையெல்லாம் தனிப்பட்ட மனிதர்களுக்குக் களங்கம் உண்டுபண்ணும் தந்திரங்களாகும். இது என்ன போலிவூட் திரைப்படமா, நாள் குறித்து வெளியீடு செய்வதற்கு? உண்மை என்றால் வீடியோவை வெளியிட வேண்டியதுதானே”, என்றவர் சொன்னார்.
வீடியோ பற்றி தகவல் வெளியிட்ட மாநில மஇகா இளைஞர் பகுதித் தலைவரையும் சரவணன் கண்டித்தார். அவர் கட்சி மத்திய செயலவையிடம் அது பற்றி புகார் செய்திருக்க வேண்டும் என்றார்.
“அவர் மஇகா உறுப்பினர் என்றால், எதிர்வரும் தேர்தலில் மஇகாவின் அடைவுநிலை பற்றிக் கவலைகொள்பவராக இருந்தால் அத்தகவலை முதலில் கட்சிக்குத்தான் தெரியப்படுத்தி இருக்க வேண்டும்”, என்று தாப்பா எம்பியுமான சரவணன் கூறினார்.