சாபா சீரமைப்பு முன்னணி தொடக்கவிழா: பிஎன் எம்பிகள் அன்வாருக்கு அழைப்பு விடுத்தனர்

வார இறுதியில் சாபா சீரமைப்பு முன்னணி(Sabah Reform Front)யின் தொடக்கவிழாவில் கலந்துகொள்ள மாற்றரசுக் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிமுக்கு அழைப்பு விடுத்துள்ளனர் பிஎன் எம்பிகளான லாஜிம் உக்கினும் (ப்யுஃபோர்ட்) வில்ஃபரட் பும்புரிங்கும் (துவாரான்).

அழைப்பு அனுப்பப்பட்டிருப்பதை சாபா பிகேஆர் தொடர்புத் தலைவர் அஹ்மட் தம்ரின் ஜைனி உறுதிப்படுத்தினார்.

“சாபா சீரமைப்பு முன்னணி தொடக்கவிழாவில் கலந்துகொள்ளும் கெளரவம் அவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது”, என்று அஹ்மட் தம்ரின் சொன்னார்.துவாரானிலும் ப்யுபோர்டிலும் நடைபெறும் இரண்டு நிகழ்வுகளுக்கு அன்வாரை இரண்டு எம்பிகளும் அழைத்திருப்பதாக அவர் தெரிவித்தார்.

இதற்குமுன் அரசல் புரசலாக இருந்ததால் அதைப் பற்றிக் கருத்துரைக்க முடியாதிருந்தது. ஆனால், இப்போது அவ்விரு எம்பிகளிடமிருந்தும் முறையான அழைப்புகள் கிடைக்கப்பெற்றிருப்பதாக  அவர் விளக்கினார்.

“இது, அவர்கள் பிஎன்னிலிருந்து விலகி,சாபாவில் பிஎன்னை வீழ்த்த  பிகேஆருடன் ஒத்துழைக்க தயாராக இருப்பதைக் காட்டுகிறது”, என்று தம்ரின் கருத்துரைத்தார்.