பிரதமரின் ஊழல்-ஒழிப்பு தம்பட்டமெல்லாம் என்னவாயிற்று?, டிஎபி

வங்கி தகவல்களைக் கசிய விட்டார் என்பதற்காக பிகேஆர் வியூக இயக்குனர் ரபிஸி ரம்லிமீது வழக்கு தொடுக்கப்பட்டிருப்பது ஊழலை எதிர்ப்பதாக மார்தட்டிக்கொள்ளும் நஜிப் அப்துல் ரசாக்கின் நிர்வாகத்துக்கு ஒரு சறுக்கலாக விளங்கப்போகிறதென்று சாடியுள்ளார் டிஏபி பரப்புரை தலைவர் டோனி புவா.

அரசாங்கம், ரபிஸி அம்பலப்படுத்திய நேசனல் ஃபீட்லாட் கார்ப்பரேசன்(என்எப்சி) ஊழலில் சம்பந்தப்பட்டவர்கள்மீது  நடவடிக்கை எடுக்காமல், தகவல் சொன்னவர்மீது நடவடிக்கை எடுத்து பழி வாங்கும் முயற்சியில் இறங்கியுள்ளது என்றாரவர்.

ரபிஸி மீது வழக்கு தொடுப்பது, ஊழல் எதிர்ப்பில் மக்கள் உதவிசெய்வதை ஊக்குவிக்கும் நோக்கம் கொண்ட 2010 தகவளிப்போர் பாதுகாப்புச் சட்டத்தின் உணர்வுக்கு முரணானது.

“ஒரு வாரத்துக்குமுன் ஜிடிபி(அரசு உருமாற்றத் திட்ட) திறந்த தினத்தின்போது தகவலளிப்போர் பாதுகாப்புச் சட்டம் அமலுக்கு வந்து 18 மாதங்கள் ஆன பின்னர் இதுவரை எழுவர் மட்டுமே அதன் பாதுகாப்பை நாடியிருப்பதாகக் கூறப்பட்டது.இது, பிஎன் அரசின்மீது நம்பிக்கை இல்லாததைத் தெளிவாகக் காண்பிக்கிறது.

“ரபிஸியைக் கூண்டில் நிறுத்துவது அச்சட்டத்துக்கு அடிக்கப்படும் சாவுமணி.இனி, தகவலளிக்க விரும்பும் எவருக்கும் தாம் பாதுகாக்கப்படுவோம் என்ற நம்பிக்கை அறவே வராது”.

இவ்விசயத்தில் டிஏபி, ரபிஸிக்குப் பக்கபலமாக நிற்கும் என்று உறுதிகூறிய புவா, பிஎன்னின் முறைகேடுகளை அம்பலப்படுத்துவதின்றும் ஒருபோதும் பயந்து பின்வாங்கப்போவதில்லை என்றும் சொன்னார்.

‘தவறானவற்றுக்கு முன்னுரிமை’

பாஸ் இளைஞர் உதவித் தலைவர் ராஜா அஹ்மட் இஸ்கந்தர் யாக்கூப், அரசாங்கம் தவறான விசயத்துக்கு முன்னுரிமை கொடுக்கிறது என்றும் முறைப்படி பார்த்தால் அது ரபிஸி அம்பலப்படுத்திய விவகாரத்துக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றும் கூறினார்.

ரபிஸி மீதான வழக்கு, அரசாங்க ஊழல் விவகாரங்களை வெளிப்படுத்துவோருக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கைபோல் தெரிகிறது.

“ரபிஸியின் செயல்கள் பாராட்டத்தக்கவை.ஊழல் தலைவர்களிடமிருந்து நாட்டைப் பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார் அவர். அவர் வெளிப்படுத்தியதில் உண்மை இருந்தது. அதன் விளைவாக ஷாரிசாட் பதவிவிலக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது”, என்றார்.

“பழிவாங்கும் அரசியலும் உண்மையை சொன்னால் வழக்கு போடுவதும் தீச் செயல்களாகும்”.

என்எப்சி, மாடு வளர்ப்புக்காக பெற்ற ரிம250 எளிய நிபந்தனைக் கடனை ஆடம்பர கொண்டோமினியம், விலைமதிப்புள்ள நிலங்கள்,பேரங்காடி முதலிவற்றில் முதலீடு செய்தது என்று குற்றம்சாட்டப்பட்டது.

அவ்விவகாரம் தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களிடமிருந்து நெருக்குதல் அதிகரித்தபோதிலும் அதிகாரிகள் என்எப்சி தலைமை செயல் அதிகாரியும் ஷாரிசாட்டின் கணவருமான முகம்மட் சாலேமீது மட்டுமே நீதிமன்றத்தில் குற்றம் சாட்டியுள்ளனர்.

பிகேஆரின் ரபிஸி பாபியா(வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் சட்டத்தின்கீழ்) கைது செய்யப்பட்டுள்ளார்.

 

 

TAGS: