லண்டன் ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபெற்ற எட்டு இறகுப் பந்து வீரர்களை, அனைத்துலக இறகுப் பந்து சம்மேளம் தகுதி நீக்கம் செய்துள்ளது.
மகளிர் பிரிவின் இரட்டையர் ஆட்டத்தில், காலிறுதிக்கு முந்தையப் போட்டியில் தெரிந்தே தோல்விடைய முயற்சி செய்தனர் என்கிற குற்றச்சாட்டுகளுக்கு அவர்கள் ஆளாயினர்.
காலிறுதிப் போட்டியில் சுலபமாக வெற்றி பெறக் கூடிய வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்ளும் நோக்கிலேயே அவர்கள் அவ்வாறாக விளையாடினர் என்று குற்றச்சாட்டுகள் எழுந்தன.
தற்போது தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள எட்டு வீராங்கணைகளில் இரு ஜோடி தென்கொரியாவைச் சேர்ந்தவர்கள், மற்ற இரு ஜோடிகள் இந்தோனேஷியா மற்றும் சீனாவைச் சேர்ந்தவர்கள்.
அவர்களின் மோசமான ஆட்டம் காரணமாக ரசிகர்கள் அவர்களை விளையாட்டரங்கில் ஏளனப்படுத்தும் வகையில் குரலெழுப்பினர்.
இந்த வீரர்களின் நடவடிக்கை மிகவும் வேதனையளிக்கக் கூடிய விசயம் என்றும், லண்டன் போட்டிகளுகே ஒரு அவப்பெயர் என்றும், லண்டன் ஒலிம்பிக் போட்டிகளின் ஏற்பாட்டுக் குழுவின் தலைவரான சபாஸ்டியன் கோ தெரிவித்துள்ளார்.
இதனிடையே இந்த விசயம் தொடர்பில் சீனா தனது சொந்த விசாரணையை தொடங்கியுள்ளது.
சீனாவின் அரச ஊடகம் ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் பெறுவதைவிட, அதில் நேர்மையாக பங்கு பெறுவதே முக்கியமானது என்று தெரிவித்துள்ளது.
ஒலிம்பிக் போட்டியில் அணிகள் குழுக்களாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடைபெறுவதாலேயே பிரச்னைகள் உருவாகின்றன என்று ஒரு அணியின் பயிற்சியாளர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இந்த முறையில் ஒரு போட்டியில் தோல்வியடைவதன் மூலம் அடுத்தச் சுற்றில் சுலபமான ஒரு போட்டியை எதிர்கொள்ளவதை உறுதி செய்துகொள்ள முடியும் எனவும் அந்தப் பயிற்சியாளர் கூறியுள்ளார்.
இதனிடையே லண்டன் ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபெறுவதிலிருந்து தமது நாட்டு வீரர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதற்கு எதிராக இந்தோனேஷியா மற்றும் தென்கொரிய அணியினர் மேல்முறையீடு செய்துள்ளனர்.