சிரியாவின் தலைவிதியை நிர்ணயிக்கும் உச்சகட்ட போர்

அலெப்போ : சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் வசம் இருக்கும் வர்த்தக நகரை மீட்பதற்காக அதிபர் பஷர்-அலி-ஆசாத்தின் அரசுப் படையினர் உச்சகட்ட போரை நடத்தி வருகின்றனர். இருதரப்பிலும் உயிர்ச்சேதம் அதிக அளவில் இருப்பதாக அஞ்சப்படுகிறது.

முதல் முறையாக தலைநகர் டமாஸ்கசின் கிறிஸ்தவப் பகுதியில் ஆரம்பித்த இந்த சண்டையில் இதுவரை, 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த உள்நாட்டுப் போர் காரணமாக, கடந்த இருவாரங்களாக மக்களின் பார்வையில் படாமல் இருந்து வரும் அதிபர் ஆசாத், ஆயுதப்படை நினைவு தினத்தை முன்னிட்டு படைவீரர்களுக்கு வாழ்த்து செய்தி அனுப்பியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

“ஆயுதம் தாங்கி போராடும் தீவிரவாதிகளுக்கு எதிராக சண்டையிடும் நமது படையினரை வாழ்த்துகிறேன். சில வாரங்களுக்கு முன்பிருந்து  ஆட்சியாளர்களுக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் நடத்திவரும் சண்டை தலைநகர் டமாஸ்கஸ் மற்றும் வர்த்தக நகர் அலேப்போவின் வீதிகளில் தற்போது தீவிரடைந்துள்ளது.”

“இருதரப்புக்கு இடையே இப்போது நடந்து வரும் இந்த கடும் சண்டை நாட்டின் தலைவிதியை நிர்ணயிக்கும். நாட்டின் தலைவிதி மட்டுமல்லாமல் மக்களின் தலைவிதி, நாட்டின் நிகழ்காலம், இறந்தகாலம், எதிர்காலம் எல்லாம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த சண்டையின் முடிவில் தெரியும்.”

“கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக சண்டையிட்டு வரும் நீங்கள் நாட்டின் மிகச்சரியான காரணங்களுக்காக சண்டையிடும் கதாநாயகர்கள்” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

அலேப்போவில் அரசுப்படையினர் மக்களுக்கு எதிராக தாக்குதல் நடத்தி வருகின்றனர் என்று பன்னாட்டு பொதுமன்னிப்பு நிறுவனம் குற்றம் சாட்டியுள்ளது. அங்கு ஆயுதங்களை பயன்படுத்த சிரியாவுக்கு எதிராக தடைவிதிக்க வேண்டும் என்று ஐ.நா. சபையில் வேண்டுகோளும் விடுக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் மீது ஆட்சியாளர்கள் தாக்குதல் நடத்துவதோடு அங்கு மருத்துவப் பணியில் ஈடுபடுவோரை சிறைப்படுத்தி வருவதாகவும் குற்றம் சாட்டியுள்ளது.

ஜெட் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர் கொண்டு போராளிகள் குழுக்களின் நிலைகள் மீது தாக்குதல் நடத்தி வரும் அரசுப் படைகள் அங்கு ஆயுதங்களை குவித்து வருவதாகவும் கூறப்படுகிறது.