பல விவகாரங்களை அம்பலப்படுத்தியுள்ள பிகேஆர் வியூக இயக்குனர் ரபிஸி ரம்லியை அரசாங்கம் வெகுமதி அளித்துப் பாராட்ட வேண்டுமே தவிர தண்டிக்கக் கூடாது என்கிறார் டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங்.
பாலியல் வல்லுறவுக்கு ஆளான வயதுகுறைந்த பெண்ணுக்காக வழக்காடிய அனுபவத்தை நினைவுகூர்ந்த பினாங்கு முதலமைச்சருமான லிம், தாமும் ரபிஸியும் அம்பலப்படுத்திய குற்றவாளிகள் சுதந்திரமாக நடமாடுவது அநீதியாகும் என்றார்.
அவர் குறிப்பிட்டது முன்னாள் மலாக்கா முதலமைச்சர் ரஹிம் தம்பி சிக் சம்பந்தப்பட்ட பாலியல் வல்லுறவு வழக்கு. அவ்வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்காக வாதாடிய டிஏபி தலைவர் 1998-இல் ஓராண்டு சிறைவாசம் அனுபவிக்க வேண்டியதாயிற்று.
“தகவலளிப்போரையும் ஊழலை அம்பலப்படுத்துவோரையும் பாதுக்காப்பதில் பிஎன் உண்மையிலேயே அக்கறை கொண்டிருக்கிறது என்று மக்கள் நம்ப வேண்டுமானால் ரபிஸிக்கு எதிரான குற்றச்சாட்டை மீட்டுக்கொள்ள வேண்டும் என்று சட்டத்துறைத் தலைவரையும் கூட்டரசு அரசாங்கத்தையும் டிஏபி கேட்டுக்கொள்கிறது”, என்று நேற்று ஓர் அறிக்கையில் அவர் கூறினார்.
புதன்கிழமை ரபிஸியும் வங்கி ஊழியல் ஜொகாரி முகம்மட்டும் நேசனல் ஃபீட்லோட் கார்ப்பரேசன்(என்எப்சி) சம்பந்தப்பட்ட இரகசிய தகவல்களைக் கசிய விட்டதாக 1989ஆம் ஆண்டு வங்கி, நிதிக்கழகச் சட்டத்தின்கீழ் குற்றம் சாட்டப்பட்டனர்.
ரபிஸி,அரசாங்கம் எளிய நிபந்தனைகளில் வழங்கிய ரிம250மில்லியன் கடனை என்எப்சி தவறாக பயன்படுத்திக் கொண்டதாகக் கூறி அதன் தொடர்பில் பல தகவல்களைக் கடந்த சில மாதங்களில் தொடர்ந்து வெளியிட்டு வந்தார்.
அதன் விளைவாக ஷரிசாட் அப்துல் ஜலில் அமைச்சர் பதவியிலிருந்து வெளியேற நேர்ந்தது.அவரின் கணவரும் என்எப்சி தலைமை செயல் அதிகாரியுமான முகம்மட் சாலே இஸ்மாயில்மீது நம்பிக்கை மோசடிக் குற்றம் சுமத்தப்பட்டது.
முகம்மட் சாலேமீது குற்றம் சாட்டப்பட்டிருப்பதே ரபிஸி சொன்னது உண்மைதான் என்பதை மெய்ப்பிக்கிறது என்றார் லிம்.
இதனிடையே மனித உரிமை கண்காணிப்பு அமைப்பான சுவாராம், ரபிஸிமீது வழக்கு தொடுக்கப்பட்டிருப்பது தகவளிப்போர் பாதுகாப்புச் சட்டம் மீதுள்ள நம்பிக்கையைப் பொசுக்கிவிடும் என்று குறிப்பிட்டது.
“ரபிஸி, ஜொகாரி ஆகியோர்மீது வழக்கு தொடுக்கப்பட்டிருப்பது அரசாங்கம் ஊழலைச் சட்டப்பூர்வமாக்கி, தனக்கு வேண்டியவர்களைப் பாதுகாக்க முனைவதைத் தெளிவாகக் காண்பிக்கிறது”.
மலேசியா பிரான்சிடம் நீர்மூழ்கிகள் வாங்கிய விவகாரத்தில் முறைகேடுகள் நிகழ்ந்துள்ளதை அம்பலப்படுத்திய விசயத்தில் தானும் பழிவாங்கும் படலத்துக்கு இலக்காகி இருப்பதாக சுவாராம் கூறிற்று.
தான் முன்வைத்த ஆதாரங்களை ஆராயாமல் தன்மீதே நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக அது வருத்தத்துடன் குறிப்பிட்டது.
ஒரு நிறுவனமாக பதிவுசெய்யப்பட்டுள்ள சுவாராமின் செயல்பாடுகள் குறித்து மலேசிய நிறுவன ஆணையம்(சிசிஎம்) விசாரணை நடத்தி வருகிறது.
“அதிகாரத்தில் உள்ளோர், நிரபராதிகளைத் தண்டித்து குற்றவாளிகளைப் பாதுகாக்க முற்படுவதை வன்மையாகக் கண்டிக்கிறோம்”, என்றது கூறியது.