சிலாங்கூர் இஸ்லாமிய சமயத் துறை (Jais), சிலாங்கூரில் ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியின் தளங்களாக மாறியுள்ளதாக வகைப்படுத்தப்பட்டுள்ள 38 பள்ளிவாசல்களைக் கண்காணித்து வருகிறது.
“முன்பு 36 பள்ளிவாசல்கள்தாம் எங்கள் பட்டியலில் இருந்தன. இப்போது மேலும் இரண்டு சேர்த்துக்கொள்ளப்பட்டிருக்கின்றன”, என்று ஜயிஸ் தலைவர் மர்சுகி உசேன் கூறியதாக இன்றைய சினார் ஹராபான் செய்தி வெளியிட்டுள்ளது.
பள்ளிவாசல்களிலும் தொழுகை இல்லங்களிலும் அரசியல் உரைகள் நிகழ்த்தப்படுவதால் ஆத்திரமடைந்த பல மலாய் என்ஜிஓ-கள் அதைக் கண்டித்து ஆகஸ்ட் முதல் தேதி நடத்திய ஆர்ப்பாட்டத்தை அடுத்து இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
என்ஜிஓ-கள் தவிரத்து வேறு யாரும் அதன் தொடர்பில் புகார் செய்யவில்லை என்று மர்சுகி தெரிவித்தார்.
இதனிடையே, பள்ளிவாசல்களில் அரசியல் கட்சிகள் குறித்து விவாதிக்கும் உறுப்பினர்களுக்கு எதிராக பாஸ் நடவடிக்கை எடுக்கும் என பாஸ் ஆணையர் டாக்டர் அப்துல் ரனி ஒஸ்மான் கூறியதாக சினார் ஹரியானின் இன்னொரு செய்தி குறிப்பிட்டது.
என்றாலும், அரசியல் பற்றி மட்டும் விவாதிப்பது தவறல்ல; ஏனென்றால் இஸ்லாத்தையும் அரசியலையும் பிரிக்க இயலாது என்றாரவர்.