ஹிண்ட்ராப் அரசியல் கட்சியாக மாறாது; போராட்டம் தொடரும் என்கிறார் வேதா !

ஹிண்ட்ராப் மக்கள் சக்தி இயக்கம் அரசியல் களத்தில் ஓர் அரசியல் கட்சியாக உருவெடுக்காது என்று நாடு திரும்பியுள்ள ஹிண்ட்ராப் இயக்கத் தலைவர் பி. வேதமூர்த்தி கூறினார்.

நாட்டில் உள்ள 20 இலட்சம் இந்தியர்களில் 5 இலட்சம் பேர் மட்டுமே ஓரளவு சுமாரான வாழ்க்கை நிலையில் உள்ளனர். மீதமுள்ள 15 இலட்சம் இந்தியர்கள் எவ்வித வாய்ப்பும் இன்றி அடிமைகளாக வாழ்ந்து வருகின்றனர்.

“ஹிண்ட்ராப் இயக்கம் இந்திய சமூதாயத்தின் உரிமைகளை பெற்றுக்கொள்வதையே இலட்சியமாக கொண்டுள்ளது. இதில் அரசியல் நோக்கம் எதுவும் எங்களுக்கு கிடையாது. அதேவேளை, ஹிண்ட்ராப் மக்கள் சக்தி இயக்கம் ஓர் அரசியல் கட்சியாக உருவெடுக்காது” என வேதமூர்த்தி கூறினார்.

“எனது பயணக் கடப்பிதழ் முடக்கப்பட்டு, நான் வெளிநாட்டில் தங்கியிருந்த காலம் வீண்போகவில்லை. மலேசிய இந்திய குடிமக்களுக்கு இழப்பீடு கோரி பிரிட்டன் அரசாங்கத்திடம் முன் வைத்துள்ள வழக்கிற்குத் தேவையான ஆதாரங்களும் ஆவணங்களும் திரட்டுவதற்குதான் இந்த கால அவகாசத்தை வெற்றிகரமாகப் பயன்படுத்தியிருக்கிறேன். இந்த வழக்கை நடத்துவதற்கு வழக்கறிஞர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். நமது போராட்டத்திற்கு என்றாவது ஒருநாள் விடியல் பிறக்கும் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறேன்” என்றார் அவர்.

கடந்த புதன்கிழமை லண்டனிலிருந்து சிங்கப்பூர் வழியாக ஜொகூருக்குள் நுழைந்த வேதமூர்த்தி தனது மனைவி மகளுடன் சிரம்பானுக்கு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.