மலாய் ஆட்சியாளர்களுக்கு வழங்கப்பட்டிருந்த சட்ட விதிவிலக்கை அகற்றிய 1993ம் ஆண்டு அரசமைப்புச் சட்டத் திருத்தம் மீதான நாடாளுமன்ற விவாதத்தின் போது முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட்-டும் மேலும் நால்வரும் பேசிய விஷயங்களுக்காக ஏன் அவர்கள் மீது தேசத் துரோகக் குற்றச்சாட்டு சுமத்தப்படவில்லை என்பதை விளக்குவதற்காக அந்த ஐவருக்கும் உயர் நீதிமன்றம் அழைப்பாணை (சபீனா) அனுப்ப வேண்டும் என மூத்த வழக்குரைஞரான கர்பால் சிங் விரும்புகிறார்.
மகாதீருக்கும் மற்ற நால்வருக்கு சபீனா வெளியிடப்பட வேண்டும் அல்லது தமக்கு எதிரான குற்றச்சாட்டு கைவிடப்பட வேண்டும் என கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் தமக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள தேசத் துரோகக் குற்றச்சாட்டு மீதான எதிர்வாதத்தில் கர்பால் கூறினார்.
சட்டத்துறைத் தலைவர் தமது அதிகாரங்களை நியாயமாகப் பயன்படுத்தவில்லை என்ற காரணத்தின் அடிப்படையில் அந்தக் குற்றச்சாட்டு தள்ளுபடி செய்யப்பட வேண்டும் என அவர் விண்ணப்பித்துக் கொண்டுள்ளார்.
பேராக்கில் 2009ம் ஆண்டு தொடக்கத்தில் மாநில அரசமைப்பு நெருக்கடி உருவான போது ஆற்றிய பங்கிற்காக பேராக் சுல்தான் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படலாம் என அதே ஆண்டு பிப்ரவரி மாதம் 6ம் தேதி நிருபர்கள் கூட்டத்தில் கூறியதற்காக கர்பால் மீது தேசத் துரோகக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
மகாதீர், அப்போது ஆராவ் எம்பி-யாக இருந்த முன்னாள் பெர்லிஸ் மந்திரி புசார் ஷாஹிடான் காசிம், பெர்க்காசா தலைவர் இப்ராஹிம் அலி, முன்னாள் பெண்டாங் எம்பி ஒஸ்மான் அப்துல் சைட் ஆகியோர் அரசமைப்புச் சட்டத் திருத்தம் மீதான விவாதத்தில் மலாய் ஆட்சியாளர்களைப் பற்றி கடுமையாகப் பேசியுள்ளனர்.
நாடாளுமன்றத்தில் அல்லது மாநிலச் சட்டமன்றங்களில் சட்டங்களை சமர்பிக்கும் போது அல்லது விவாதிக்கும் போது நாடாளுமன்ற அல்லது சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தேசத்துரோக குற்றச்சாட்டுகளிலிருந்து விதிவிலக்கு அளிக்கப்படவில்லை என்பதை அந்த மூத்த வழக்குரைஞர் சுட்டிக்காட்டினார்.
நாடாளுமன்ற அல்லது சட்டமன்றங்களில் பேசப்படுகின்ற விஷயங்கள் தொடர்பில் யார் மீதும் நீதிமன்றத்தில் சட்ட நடவடிக்கை எடுக்க முடியாது என கூட்டரசு அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 63 (4) கூறினாலும் அந்த விதிவிலக்கு 1948ம் ஆண்டுக்கான தேசத்துரோகச் சட்டத்தின் கீழ் வரும் குற்றங்களுக்கு செல்லாது.
அரசமைப்புச் சட்டத்தின் கீழ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதற்கு ஏற்ப சட்டத்துக்கு முன்பு சமம் என்ற தமது உரிமை மீறப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட கர்பால், தாம் குற்றம் சாட்டப்பட்டுள்ளதைக் காட்டிலும் கடுமையான விஷயங்களைக் கூறிய மகாதீர், ஷாஹிடான், இப்ராஹிம், ஒஸ்மான் ஆகியோருக்கு எதிராக ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதையும் தாம் தெரிந்து கொள்வதற்காக அவர்களுக்குச் சபீனா அனுப்பப்பட வேண்டும் என்றார்.
அந்த நால்வர் மீது வழக்குப் போடாதது குறித்து விளக்குவதற்காக அப்போதைய சட்டத்துறைத் தலைவர் அபு தாலிப் ஒஸ்மானுக்கும் சபீனா அனுப்பப்பட வேண்டும் என்றும் கர்பால் விருப்பம் தெரிவித்தார்.
புக்கிட் குளுகோர் எம்பி-யுமான கர்பால், 1993ம் ஆண்டு அரசமைப்புத் திருத்தத்தை சமர்பித்த போது மலேசியா அரசமைப்புச் சட்டத்திற்கு உட்பட்ட அரசாட்சி என்பதால் மலாய் ஆட்சியாளர்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள விதிவிலக்கு அகற்றப்பட வேண்டும் என மகாதீர் பேசியதை உள்ளடக்கிய நாடாளுமன்றக் கூட்டக் குறிப்புக்களையும் வாசித்தார்.
“மூன்று முன்னைய பிரதமர்கள் ஆட்சியாளர்களுக்குப் பல முறை அறிவுரை கூறியுள்ளனர். அது, அமைச்சரவைக்கும் அம்னோ உச்சமன்றக் கூட்டங்களிலும் தெரிவிக்கப்பட்டுள்ளதால் எனக்குத் தெரியும்.”
கர்பாலுடைய சபீனா விண்ணப்பத்துக்கு தான் ஆட்சேபம் தெரிவிக்கக் கூடும் என டிபிபி நூரின் படாருடின் தலைமையிலான அரசு தரப்பு கூறியது.
கூட்டரசு அரசமைப்புச் சட்டத்தின் 145வது பிரிவின் கீழ் யார் மீது வழக்குத் தொடரலாம் என்பதை முடிவு செய்யும் உரிமை சட்டத்துறைத் தலைவருக்கு இருப்பதாக டிப்பி அஸ்லினா ராஸ்டி வாதாடினார்.
கர்பாலுடைய விண்ணப்பத்தை நீதிமன்றம் நிராகரிக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.
அந்த சபீனா விவகாரம் மீது தொடர்ந்து வாதத் தொகுப்பை வழங்குவதற்கு ஆகஸ்ட் 24ம் தேதியை நீதிபதி அஸ்மான் அப்துல்லா நிர்ணயம் செய்தார்.