எண்ணெய் உரிமப் பணக் கூட்டத்தில் பாஸ் பேராளர் பங்கு கொள்ள நஜிப் விருப்பம்

கிளந்தான் மாநிலத்துக்கான எண்ணெய் உரிமப் பணம் மீது விவாதம் நடத்துவதற்கு பேராளர் ஒருவரை அனுப்புமாறு பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் பாஸ் வழி நடத்தும் கிளந்தான் அரசாங்கத்தைக் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

அந்த மாநில மந்திரி புசார் நிக் அப்துல் அஜிஸ் நிக் மாட் அதனை இன்று அறிவித்தார்.

நிக் அப்துல் அஜிஸின் தனிப்பட்ட செயலாளர் ரோஸ்டி முகமட்-டுக்கு அனுப்பப்பட்டுள்ள ஒரு கடிதத்தில் நஜிப்பின் வேண்டுகோள் தெரிவிக்கப்பட்டுள்ளதாக ஹராக்கா டெய்லி செய்தி வெளியிட்டுள்ளது.

அடுத்த பொதுத் தேர்தலுக்கு முன்னதாக எண்ணேய் உரிமப் பண விவகாரத்துக்குத் தீர்வு காண்பதாக கிளந்தான் அம்னோ அறிவித்த இரண்டு நாட்களுக்குப் பின்னர் அந்தக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

கிளந்தானுக்கு எண்ணெய் உரிமப் பணம் கொடுக்கப்படாத விஷயத்தை 1990ம் ஆண்டு தொடக்கம் கிளந்தானை ஆட்சி புரிந்து வரும் பாஸ் கட்சி ஒர் அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்தி வருகின்றது.

கூட்டரசு அரசாங்கமும் அம்னோவும் மாநிலத்தை எண்ணெய் உரிமப் பண விவகாரத்தில் ஏமாற்றி வருவதாக பாஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

கிளந்தான் மாநிலக் கடற்கரைக்கு அருகில் எடுக்கப்பட்டு வரும் ஆண்டுக்கு 800 மில்லியன் ரிங்கிட் என மதிப்பிடப்பட்டுள்ள எண்ணெய்க்கு பெட்ரோனாஸ் நியாயமான உரிமப் பணத்தை மாநிலத்துக்கு கொடுக்க வேண்டும் என பல ஆண்டுகளாக பாஸ் கட்சி கோரி வருகின்றது.

ஆனால் பிஎன் தலைமையிலான கூட்டரசு அரசாங்கம் அதனைக் கொடுக்க மறுத்து, ‘கருணை நிதி’ என்னும் போர்வையில் கூட்டரசு மேம்பாட்டுத் துறைக்கு 20 மில்லியன் ரிங்கிட் வழங்கி அந்த நிதி கூட்டரசு கட்டுப்ப்பாட்டில் இருப்பதை உறுதி செய்துள்ளது.

கிளந்தான் அந்த தகராற்றை 2010ம் ஆண்டு நீதிமன்றத்துக்குக் கொண்டு சென்றது. ஆனால் அந்த வழக்கு இன்னும் விசாரிக்கப்படவில்லை.

 

TAGS: