லண்டன் ஒலிம்பிக் 2012 : குத்துச் சண்டை முடிவில் சர்ச்சை!

லண்டன்: லண்டனில் நடைபெற்றுவரும் ஒலிம்பிக் போட்டிகளில், இந்திய குத்துச் சண்டை வீரர் ஒருவர் தகுதிச் சுற்றில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட பிறகு அனைத்துலக குத்துச் சண்டை மன்றம் அந்த முடிவை மாற்றியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

காலிறுதிக்கு முந்தைய போட்டியில் இந்தியாவின் விகாஸ் க்ருஷன் அமெரிக்காவில் எரால் ஸ்பென்சை 13-11 என்கிற புள்ளிக் கணக்கில் வென்றதாக அறிவிக்கப்பட்டது.

ஆனால் பின்னர் அமெரிக்கா செய்த மேல்முறையீட்டின் காரணமாக அந்த முடிவு மாற்றப்பட்டு எரால் ஸ்பென்ஸ் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் விகாஸ் க்ருஷன் காலிறுதிக்குள் நுழையும் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளதாக இந்திய ஒலிம்பிக் சங்கமும், இந்திய குத்துச் சண்டை மன்றமும் தெரிவித்துள்ளது.

மாற்றப்பட்ட முடிவு ரத்து செய்யப்பட வேண்டும் என இந்தியத் தரப்பு முறையீடு செய்துள்ளது. ஆனால் போட்டி நடுவர்கள் எடுத்த முடிவை மாற்ற முடியாது என்று அனைத்துலக குத்துச் சண்டை மன்றம் தெரிவித்துவிட்டது.

இதையடுத்து இந்திய அரசு இந்தப் பிரச்னையை ஒலிம்பிக் மன்றத்திடம் எடுத்துச் செல்ல வேண்டும் என்று அழுத்தங்கள் அதிகரித்து வருகின்றன.

ஒலிம்பிக் குத்துச்சண்டைப் போட்டிகளில் நடுவர்கள் அளித்த முடிவு மாற்றப்படுவது இதுவே முதல்முறை என்று சுட்டிக்காட்டுகிறார் இந்திய குத்துச்சண்டை அணியின் தேர்வுக்குழுவின் உறுப்பினரும் முன்னாள் ஒலிம்பியனுமான வி தேவராஜன்.

கள நடுவர் ஒரு தவறு செய்துள்ளதாக போட்டியின் மற்ற நடுவர்களும் முடிவெடுக்கும் குழுவும் கருதினால், அதற்காக ஒரு வீரர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட முடிவை மாற்றுவது எந்த வகையிலும் சரியல்ல என்றும் தேவராஜன் கூறுகிறார்.

இந்திய வீரர் மீது தவறு உள்ளது என்று கருதப்பட்டாலும் அதற்காக அவருக்கு போட்டியின் போது ஒரு எச்சரிக்கை விடுக்கப்பட்டு அதன் பிறகே மீண்டும் தவறு செய்தால் எதிராளிக்கு புள்ளிகள் அளிக்கப்பட வேண்டும் என்றுள்ள விதிமீறலும் இதில் நடைபெற்றுள்ளது என்றும் அவர் கூறுகிறார்.

அளிக்கப்பட்ட ஒரு முடிவு தற்போது மாற்றப்பட்டுள்ளது, தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்துகிறது எனவும் தேவராஜன் சுட்டிக்காட்டுகிறார்.