ஹிண்ட்ராப்-பைக் கட்சி சார்பற்ற பாதையில் தாம் கொண்டு செல்லப் போவதாக வெளிநாட்டில் நாடு கடந்து வாழ்ந்த பின்னர் அண்மையில் தாயகம் திரும்பியுள்ள ஹிண்ட்ராப் தலைவர் பி வேதமூர்த்தி கூறியிருக்கிறார்.
ஆனால் தாம் நாட்டில் இல்லாத வேளையில் ஹிண்டராப் இயக்கத்துக்குத் தலைமை தாங்கிய தமது மூத்த சகோதரர் பி உதயமுமாருடன் தாம் கருத்து வேறுபாடு கொண்டுள்ளதாக கூறப்படுவதை வேதமூர்த்தி மறுத்தார்.
“இல்லை. எங்களுக்குள் பிரச்னை இல்லை. நாங்கள் மாறுபட்ட வியூகத்தையும் அணுகுமுறையையும் பின்பற்றுவதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். அவர் சுதந்திரமான சிந்தனைகளைக் கொண்டுள்ளார். நானும் அவ்வாறே. பெரிய அமைப்புக்களில் கருத்து வேறுபாடுகள் நிலவுவது இயல்பானது,” என அவர் சொன்னார்.
முன்னதாக அவர் 1,500 ஹிண்ட்ராப் ஆதரவாளர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் உரையாற்றினார்.
அடுத்த பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்காக ஹிண்ட்ராப்பின் அரசியல் பிரிவான மனித உரிமைக் கட்சிக்கு தலைமை தாங்க உதயகுமார் திட்டமிட்டுள்ளது பற்றி அவரிடம் வினவப்பட்டது. அதற்குப் பதில் அளித்த வேதமூர்த்தி,” நீங்கள் அதனை உதயகுமாரிடம் கேட்க வேண்டும். காரணம் அவர் அந்தக் கட்சிக்குத் தலைமைச் செயலாளர். நான் அந்தக் கட்சியைச் சேர்ந்தவன் அல்ல,” என்றார்.
“அவருக்குச் சொந்தமாக வியூகத்தை வைத்திருப்பது நிச்சயம். தாம் என்ன செய்கிறோம் என்பது அவருக்குத் தெரியும். நான் அதில் தலையிடமாட்டேன். ஆனால் என் வியூகம் நிச்சயம் மாறுபட்டது.”
“அரசியல் கட்சி சார்பற்ற நிலையே என்னுடையது,” என வலியுறுத்திய வேதமூர்த்தி, ஏழ்மையில் உள்ள இந்தியர்களுக்குப் போராடுவதே தமது கொள்கை என்றார். அது தமது தலைமைத்துவத்தின் கீழ் தொடரும் என்றும் வேதமூர்த்தி குறிப்பிட்டார்.
‘ஹிண்ட்ராப் பழி வாங்கப்பட்டது’
எந்தத் தடையும் இல்லாமல் தாம் மலேசியாவுக்குத் திரும்ப அனுமதிக்கப்பட்டது பற்றிக் கருத்துரைத்த அவர், ஏற்கனவே அந்த இயக்கம் பழி வாங்கப்பட்டதாகச் சொன்னார்.
“மலேசியாவுக்குத் திரும்ப எனக்கு பாஸ்போர்ட் கொடுக்கப்பட்டது, அரசாங்கத்தை வீழ்த்த முயலும் பயங்கரவாதிகள் என நாங்கள் முன்பு முத்திரை குத்தப்பட்டதால் (அது அபத்தமானது) ஹிண்ட்ராப் பழி வாங்கப்பட்டதை தெளிவாகக் காட்டுகின்றது.”
“ஹிண்ட்ராப் மீதான தடையை நீக்குவதற்கான நேரம் வந்து விட்டது. எங்களை ஒர் அரசு சாரா அமைப்பாகவும் மனித உரிமை இயக்கமாகவும் செயல்படுவதற்கு அனுமதியுங்கள். பிரச்னைகளை தீர்ப்ப்பதற்கு நாங்கள் விவாதம் நடத்த தயார்.”
இந்திய சமூகத்துடன் தொடர்பு கொள்வதற்கு பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் இப்போது மேற்கொள்ளும் முயற்சிகள் ஹிண்ட்ராப் எழுப்பிய பிரச்னைகள் நியாயமானவை என்பதைக் காட்டுகின்றது என்றார் அவர்.
“அரசாங்கம் ஏற்கனவே இல்லை என்றும் உங்கள் கோரிக்கைகள் தீவிரமானவை என்றும் கூறி வந்தது. ஆனால் இப்போது நஜிப் எல்லா இடங்களுக்கும் சென்று அன்பளிப்புக்களை கொடுத்து வருவது அவர் அந்தப் பிரச்னைகளை அங்கீகரித்துள்ளதைக் காட்டுகிறது,” என வேதமூர்த்தி மேலும் குறிப்பிட்டார்.