தேர்தல்களின் போது 100,000 பேரைக் கொண்ட போலீஸ் படை வழக்கமாக பிஎன்-னுக்கு ஆதரவளிப்பதற்குத் தாங்கள் எதிர்க்கட்சிகளுக்கு வாக்களித்தால் ‘துரோகிகள்’ என்றும் நன்றி மறந்தவர்கள் என்றும் தாங்கள் கருதப்படலாம் என்ற அச்சம் அதிகாரிகளிடையே நிலவுவதே காரணமாகும்.
இவ்வாறு புக்கிட் அமான் குற்றப் புலானய்வுத் துறை இயக்குநர் பொறுப்பிலிருந்து ஒய்வு பெற்ற பாவ்சி ஷாரி கூறுகிறார். அவர் மூன்று மாதங்களுக்கு முன்னர் பாஸ் கட்சியில் சேர்ந்தார்.
போலீஸ் படையில் உள்ள ஆண்களும் பெண்களும் தாங்கள் அரசாங்கத்துக்குக் கடமைப்பட்டுள்ளதாகவும் கடன்பட்டுள்ளதாகவும் கருதுவதால் அந்த நிலை எழுகிறது என அவர் சொன்னார்.
“பல போலீஸ்காரர்கள் தங்களுக்கான சம்பளத்தையும் அலவன்ஸ்களையும் அரசாங்கம் கொடுப்பதாக எண்ணுகின்றனர். அந்த எண்ணத்தின் விளைவாக இது நாள் வரையில் ஆட்சி புரியும் பிஎன்-னுக்குப் பதில் வேறு யாரும் அரசாங்கமாக இருக்க முடியாது என்ற சிந்தனையும் அவர்களிடம் ஊறிப் போய் விட்டது.”
“அதனால் தேர்தலில் பிஎன்-னுக்கு வாக்களிக்காதவர்கள்… அரசாங்கத்துக்கு ‘துரோகம் செய்கின்றவர்களாக’ அல்லது நன்றி மறந்தவர்களாக கருதப்படுவர் ,” என பாவ்சி சொன்னார்.
அரசாங்கமும் அதிகாரத்தில் உள்ள கட்சியும் தனித்தனியாக வைக்கப்பட வேண்டும் என பாவ்சி வலியுறுத்தினார். தாங்கள் விரும்பும் கட்சியைத் தெரிவு செய்வதற்கான உரிமையை போலீஸ் படை உறுப்பினர்கள் சுதந்திரமாகப் பயன்படுத்த வேண்டும் என்றார் அவர்.
“அரசாங்கம் என்பது மக்கள் வழங்கிய கட்டளையைப் பெற்றுள்ள அமைப்பாகும். அது தனது பொறுப்புக்களை நிறைவேற்ற வேண்டும். அது நமக்கு மக்களுக்கு உணவு அளிக்க வேண்டும். ஒரே கட்சிக்கு நாம் வாக்களிக்க வேண்டும் அல்லது ஆதரவு அளிக்க வேண்டும் என்பது நமக்குக் கட்டாயமல்ல என்பதையும் மக்கள் உணர வேண்டும்.”
“நாம் எந்தக் கட்சியையும் தேர்வு செய்யலாம். கட்சித் தலைவர்கள் நல்லவர்களாக, நாணயமானவர்களாக, நம்பிக்கையானவர்களா, ஊழல் இல்லாதவர்களாக இருந்தால் மிக மிக நல்லது.”
“ஆகவே நாம் இன்னொரு கட்சிக்கு ஆதரவு அளிக்க விரும்பினால் நாம் (போலீஸ் படையில் உள்ளவர்கள்) துரோகிகளாக முத்திரை குத்தப்படலாம் என அஞ்ச வேண்டாம்,” என பாவ்சி ஷா அலாமில் உள்ள தமது இல்லத்தில் மலேசியாகினிக்கு வழங்கிய சிறப்புப் பேட்டியில் கூறினார்.
மக்களுக்குச் சேவை செய்வதே நமது கடமை
பிஎன்-னுக்கு வாக்களிக்குமாறு அரசாங்கம் போலீஸ்காரர்களை நெருக்குகிறதா என வினவப்பட்ட போது அரசாங்கம் அவ்வாறு செய்ய வேண்டிய அவசியம் இல்லாததால் தமது காலத்தில் அது நிகழவில்லை என்றார் அவர்.
போலீசாரும் பொதுத் துறை ஊழியர்களும்அரசாங்கத்தில் வேலை செய்யும் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ள விதிமுறைகள், நடைமுறை வழிகாட்டிகள் அல்லது உத்தரவுகளைப் பின்பற்ற வேண்டும் என்றும் அந்த முன்னாள் குற்றப் புலனாய்வுத் துறைத் தலைவர் கூறினார்.
குறிப்பிட்ட ஒரு கட்சிக்கு போலீஸ் அதிகாரிகள் தங்கள் ஆதரவைத் தெரிவித்தால் அவர்கள் விதிமுறைகளை மீறியதாக கருதப்படுவர் என பாவ்சி சொன்னார்.
“நீங்கள் அரசாங்கத்துக்கு கடமைப்பட்டுள்ளீர்கள். நீங்கள் கீழ்ப்படிய வேண்டும். சேவை செய்ய வேண்டும். உங்கள் சேவையின் போது ஒரு கட்சிக்கு ஆதரவாக செயல்படும் நிலை ஏற்படக் கூடாது.”
மக்களுக்கு சேவை செய்வதே நம் கடமையாகும்
“போலீஸ் அதிகாரி என்ற முறையில் உங்கள் கடமைகளில் குற்றப்பதிவுகளைச் செய்வதும் கைது செய்வதும் அடங்கும். சட்டங்களுக்கு இணங்க உங்கள் வேலையைச் செய்யுங்கள்.”
“நாம் நேர்மையாக நடக்க வேண்டும். யாரையும் குறி வைக்க வேண்டாம். அப்போது உங்கள் சம்பளம் ‘ஹலாலாக’ (சட்டப்பூர்வமானதாக) இருக்கும். அரசாங்கம் அதனை உங்களுக்குக் கொடுக்கிறது. நீங்கள் நேர்மையாக இருந்தால் உங்களுக்கு அல்லாஹ்-விடமிருந்து வெகுமதிகள் கிடைக்கும்,” என்றும் பாவ்சி சொன்னார்.
தெரிவு செய்யும் உரிமையைப் புரிந்து கொள்ள அதிகாரிகள் தவறுகின்றனர்
தாங்கள் விரும்பும் அரசியல் கட்சியைத் தேர்வு செய்யும் சுதந்திரம் தங்களுக்கு இருப்பதைப் புரிந்து கொள்ள சில போலீஸ்காரர்கள் தவறி விடுவதாக பாவ்சி குறிப்பிட்டார்.
பிஎன்-னை மட்டுமே அரசாங்கமாக தேர்வு செய்யுமாறு போலீஸ் படையினருக்கு ஆணையிடப்பட்டால் ஜனநாயகம் என்பதற்கு அர்த்தமில்லாமல் போய் விடும்.
“ஜனநாயகம் என்றால் என்ன ? நீங்கள் ஜனநாயகத்தை வலுப்படுத்த வேண்டும். நீங்கள் சரியானதற்கு ஆதரவு அளிக்க வேண்டும். தவறை மாற்ற வேண்டும் என்பதே அதன் பொருள் ஆகும்,” என அவர் மேலும் கூறினார்.
அண்மையில் பாஸ் கட்சியில் இணைந்த பல முன்னாள் மூத்த அரசாங்க அதிகாரிகளில் பாவ்சியும் ஒருவர் ஆவார்.
32 ஆண்டுகள் போலீஸ் படையில் பணியாற்றியுள்ள அவர் சரவாக், சிலாங்கூர் போலீஸ் படைத்தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.
அவர் 2005ம் ஆண்டு புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறைத் தலைவராக நியமிக்கப்பட்டார். அதற்கு அடுத்த ஆண்டு அந்தப் பதவியிலிருந்து ஒய்வு பெற்றார்.