எங்கெங்கு நோக்கினும் குற்றச்செயல்களே: மலேசியாகினி ஊழியர்களின் அனுபவங்கள்

குற்றங்கள் குறைந்திருப்பதாகவும் ஊடகங்கள்தாம் குற்றச்செயல்கள் பெருகியிருப்பது போன்ற தோற்றத்தை உருவாக்கிவிட்டன என்றும் போலீசும் அரசாங்கத் தலைவர்களும் கூறிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், மலேசியாகினி ஊழியர்களில் சிலர் அதை ஒப்புக்கொள்ள மாட்டார்கள். ஏனென்றால்,அவர்கள்  கடந்த மாதம் குற்றச்செயல்களுக்கு நேரடியாக பலியானவர்கள்.

ஒருவர் ஒரு கொள்ளைக்கும்பலிடம் பொருள்களைப் பறி கொடுத்தார், மற்ற மூவரில் ஒருவரின் கார் களவாடப்பட்டது, மற்றவர்களின் கார்கள் உடைக்கப்பட்டு பொருள்கள் திருடு போயிருந்தன.

அவர்களின் நேரடி அனுபவங்கள்:

இணையத்தள, தொடர்புப்பகுதி நிர்வாகி சுபேந்திரன் ரவீந்திரன்

ஜூலை 24,பின்னிரவு நேரம், சுபாங் ஜெயா சைம் டார்பி மருத்துவ மையத்துக்கு அருகில் இரு கொள்ளையரிடம் பொருள்களைப் பறிகொடுத்தேன்.

இரவு மணி 1.28 இருக்கும். மருத்துவ மையத்தில் அவசர சிகிச்சை பிரிவில் இருந்த ஓர் உறவினரைப் பார்த்துவிட்டு சுபாங் பிசினஸ் மையத்துக்கு அருகில் இருந்த தே தாரிக் கடையை நோக்கிச் சென்று கொண்டிருந்தேன்.

வழியில் இருவர் நின்றனர். அவர்களைக் கடந்து செல்ல முற்பட்டபோது  ஒருவர் ஒரு இடத்துக்குச் செல்ல என்னிடம் வழி கேட்டார்.

நான் பதில் சொல்வதற்குமுன் அந்த ஆள் திடீரென்று என் சட்டையின்  கழுத்துப்பட்டையை இறுக்கமாகப் பிடித்தார்.நான் அப்பிடியிலிருந்து விடுவிக்கப் போராடியபோது மற்றொருவன் கையில் ஒரு இரும்புக் கம்பியைத் தூக்கிக்கொண்டு அருகில் வந்தான்.

தமிழில் பேசிய அவர்கள் என் உடைகளைக் களையுமாறு கூறினர். நான் மறுத்தேன். என் பணப் பையையும் கைபேசியையும் கேட்டனர். கொடுக்க முடியாது என்றேன்.என் சட்டையைப் பிடித்திருந்தவன் என் முகத்தில் குத்தினான்.

அப்போதுதான் அருகில் ஒரு கார் நிற்பதையும் அதில் இருவர் அமர்ந்து எங்கள் பக்கமே பார்த்துக்கொண்டிருப்பதையும்  கவனித்தேன்.எனக்குப் புரிந்தது, இது நால்வர் கொண்ட கூட்டம், எதிர்த்துப் போராடுவது நல்லதல்ல என்று முடிவு செய்து அவர்கள் சொன்னபடி செய்தேன்.

என் கைபேசி, பணப்பை ஆகியவற்றை எடுத்துக்கொண்டு அவர்களின் காரில் பறந்து போனார்கள்.

உடனடியாக, போலீசில் புகார் செய்தேன்.அவர்களின் கார் புரோட்டோன் ஈஸ்வரா, சாம்பல் நிறம் அல்லது நீல நிறமாக இருக்கலாம்.காரின் எண் BFY 5334.

என் அறிவுரை: விழிப்பாக இருங்கள், குறிப்பாக இரவு நேரங்களில்.ஒரு பகுதியில் இரண்டு, மூன்று பேர் ஒரு காரில் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தால் எச்சரிக்கையாக இருங்கள்.வழியில் நின்ற இருவரையும் உணவக ஊழியர்கள் என்று தப்பாக நினைத்து விட்டேன். அதனால் நேர்ந்த தொல்லை இது.

செய்தியாளர் லீ லோங் ஹுய்

ஜூலை 17, இரவு மணி 8.30க்கும் 10.30க்குமிடையில் கூடைப் பந்தாட்டம் பார்த்துக்கொண்டிருந்தபோது ஷா ஆலம் கார் நிறுத்துமிடத்தில் நிறுத்தி வைத்த என் கார் காணாமல் போனது.

கூடைப்பந்தாட்டம் முடிந்து வெளியில் வந்தபோதுதான் கார் நிறுத்துமிடம் போதுமான வெளிச்சமின்றி இருண்டு கிடப்பதை உணர்ந்தேன். நிறுத்தி வைக்கப்பட்ட இடத்தில் என் காரைக் காணவில்லை. உடனே போலீஸ் நிலையம் சென்று புகார் செய்தேன்.

நல்ல வேளையாக, 11 நாள்களுக்குப் பின்னர்  பெட்டாலிங் ஜெயா, குடியிருப்புப் பகுதியில் என் கார் கைவிடப்பட்ட நிலையில் கிடப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். காரின் பின்பக்கம் ஆழமாக நெளிந்திருந்தது, இடப்புற கண்ணாடி உடைந்திருந்தது. கார் முழுவதும் கீறல்கள். ஆனால், இயந்திரம் நன்றாகவே இருந்தது. காரின் உள்பகுதிகளுக்கும் சேதமில்லை.

காரைப் பெற்றுக்கொள்ளச் சென்றபோது போலீஸ் அதிகாரி கூறியதுதான் வருத்தமளித்தது. “குற்றச் செயல் எதுவும் நிகழ்ந்திருப்பதாக தெரியவில்லை” என்றாரவர்.

கார் இரண்டு வாரங்களில் திரும்பக் கிடைத்தது. ஆனால், எதுவும் நடக்கவில்லை என்பதுபோல் அந்த அதிகாரி தெரிவித்த கருத்தும் என் காரை வைத்து ஜாலியாக சுற்றித் திரிந்த கயவர்கள் வெளியில் சுதந்திரமாக சுற்றித் திரிகிறார்களே என்ற நினைப்பும் அடிக்கடி வந்து ஆத்திரமூட்டுகின்றன.

முதுநிலை வீடியோ பதிவாளர் டான் ஜியுன் வூ

ஜூலை 24 இரவு பழைய கிள்ளான் சாலையில் சகா ஒருவருடன் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது என் கார் கண்ணாடியை உடைத்து காரின் உள்ளே இருந்த ரிம10,000 பெறுமதியுள்ள கேமிராவையும் வீடியோ பதிவுக் கருவியையும் திருடிச் சென்று விட்டார்கள்.

நானும் என் சக ஊழியரும் இரவு மணி 9.30அளவில் அங்கிருந்த சீன உணவகத்துக்குத் தனித்தனியே காரில் சென்றோம். கடைக்கு அருகில், பஸ் நிறுத்தத்துக்குப் பக்கத்தில், தெரு விளக்கின்கீழ் கார்களை அருகருகே நிறுத்தி வைத்தோம்.

ஒரு மணி நேரமாயிற்று. சாப்பிட்டு முடிக்க. அதன்பின்னர் கார் நிறுத்துமிடம் சென்றோம்.என் காரைச் சுற்றி சிலர் நின்றிருந்தனர்.சைக்கிளில் இருந்த ஒருவர் காரின் முன்பகுதியில் பயணி அமரும் இடத்தில் உள்ள கண்ணாடி உடைக்கப்பட்டிருப்பதாக என்னிடம் தெரிவித்தார்.

அவர், தம் போலீஸ் அடையாள அட்டையைக் காண்பித்து போலீசில் புகார் செய்யுமாறு கூறி, திருடர்கள் அங்கு எங்காவது சுற்றித் திரிகிறார்களா என்று பார்ப்பதாகச் சொல்லிவிட்டு சென்று விட்டார்.

பஸ் நிறுத்தத்தில் நின்ற ஒருவர் நடந்ததையெல்லாம் பார்த்திருக்கிறார்.நாங்கள் காருக்குத் திரும்பி வர 5,10 நிமிடங்கள் இருக்கும்போதுதான் அது நடந்திருக்கிறது. நால்வர் அடங்கிய கும்பல் ஒன்றுதான் அதைச் செய்துள்ளது. அவர்களில் ஒருவன் முழங்கையாலேயே கண்ணாடியை உடைத்திருக்கிறான்.

வீடியோ பதிவுக் கருவிகளை என்னுடன் எடுத்துச் செல்லாதது என் தப்புத்தான்.முன் இருக்கைக்குக் கீழே அவற்றை வைத்திருந்தேன். எல்லாமே மலேசியாகினிக்குச் சொந்தமானவை. அவை தவிர வேறு எதுவும் களவு போகவில்லை.

அந்த இடம் அப்போதுகூட பரபரப்பு மிகுந்திருந்தது. பேருந்துகள் வருவதும் போவதுமாக இருந்தன.பயணிகளும் இறங்கி, ஏறிக்கொண்டிருந்தார்கள்.

போலீசில் புகார் செய்தேன்.புகாரைப் பதிவு செய்துகொண்ட அதிகாரி போலீஸ் அடையாளச் சின்னங்கள் கொண்ட போலீஸ் கார்களின் கண்ணாடிகள்கூட உடைக்கப்பட்டு உள்ளே இருந்த பொருள்கள் திருடப்பட்டுள்ளன என்றார்.

கார்களின் உள்ளே மின்னியல் பொருள்கள் உண்டா என்பதைக் கண்டுபிடிக்க கொள்ளையர்கள் பயன்படுத்தும் கருவியையும் காண்பித்தார்.அது சீனாவில் தயாரிக்கப்பட்டது.காருக்குள் கேமிராக்கள், மடிகணினிகள் முதலியவை இருந்தால் காண்பித்துக் கொடுத்து விடுகிறது.

அதனால், காருக்குள் மின்னியல் பொருள் எதையும் விட்டு செல்ல வேண்டாம் என்றவர் அறிவுரை கூறினார்.

உதவி செய்தி ஆசிரியர் குவெக் செர் குவாங் கெங்

மலேசியாகினி அருகில், பங்சார் உத்தாமாவில் லோரோங் அப்துல்லாவில் நிறுத்தி வைக்கப்பட்ட என் காரின் கண்ணாடியை உடைக்க முயன்றிருக்கிறார்கள்.ஆனால், கார் திருட்டுக்கு எதிராக கண்ணாடியில் பாதுகாப்பு மெல்லிழை ( anti-theft security film) ஒட்டப்பட்டிருந்ததால்  கண்ணாடி உடையவில்லை.

அப்பகுதியில் கார் நிறுத்த போதுமான இடவசதி இல்லாததால் பலரும், கேடிஎம் குடியிருப்புப் பகுதிக்குச் செல்லும் அந்தச் சாலை நெடுகிலும் கார்களை நிறுத்தி வைப்பது வழக்கமாகும்.அங்கு பலருடைய கார்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டு உள்ளே இருக்கும் பொருள்கள் களவு போயுள்ளன. அன்று என் முறை.

நல்ல வேளையாக கண்ணாடியில் ஒட்டப்பட்ட மெல்லிழை அது உடையாமல் பாதுகாத்தது.